Sunday, September 09, 2007

பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...!!!

ஒவ்வொரு முறை ஊர்க்காடுகளில் திருமணம் என்ற ஒன்று நடந்தேறும்பொழுதும் என்னால் பார்க்க நேரும் ஒரு கே(அ)வலம் இந்த வர(வராத)தட்சணை விசயம். அண்மையிலும் இது போன்ற ஒரு விசயம் நடந்தேறியதாம்.

இத்தனைக்கும் இரு பக்க நபர்களுமே அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள். வரதட்சணை கொடுப்பதோ வாங்குவதோ சட்டப்படி குற்றமென்று அறிந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும். இந்த லட்சனத்தை பின்புலமாக கொண்டு ஊரே மூக்கில் விரல் (நல்லவேளை வேறு எங்கும் வைத்துக் கொள்ளவில்லை) வைக்கும் படி தடபுடலாக அந்தத் தொழில் நடந்திருக்கிறது. இந்த கட்டுரை கொஞ்சம் காட்டமாகவே இருக்கப்போகிறது. ஏன் இப்படி எழுதத் தூண்டியது என்றால் கூறுகிறேன் விபரங்களை, அறிந்து கொள்ளுங்கள் அன்பர்களே!


மணமகன் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறாராம், விரிவுரையாளராக (எதுக்கென்று யாராவது அறிந்தால் எனக்கும் சொல்லுங்கள்). தனது மாணாக்கர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து சமூக அவலங்களுக்கு விடையளிக்கும் இடத்தில், அதுவும் அரிதுப்பெரும்பாண்மையான நம்மில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஒரு ஊரில் வசிப்பவரும் அவரே.


இந்நிலையில் இவர் பெண் வீட்டாரிடம் அவர்கள் எவ்வளவுதான் பெரீரீரீரீய பணக்காரராக இருப்பின் கை நீட்டி எப்படி கொடுக்கும் பண முடிப்புகளை பெற்றுக்கொண்டு அத்துடன் வரும் பெண்ணுடன் முதலிரவு நடத்த மனம் இடமளிக்கக் கூடும். எனக்கு சற்றே இந்த சூழலை உற்று நோக்கும் பொழுது ரொம்பவே மனது கூசிப்போகிறது.


இதற்கு எதிர் மாறாக அவ்வூரிலேயே சற்றும் எதனையும் எதிர்பார்க்காது சத்தமே இல்லாமல் இது போன்ற ஈனச் செயல்களில் நாட்டம் கொள்ளாமல் திருமணங்களை நடத்துபவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவ்வாறு இருந்திருக்கும் பட்சத்தில் ஏன் மக்களோ அல்லது வேறு நல்ல மனிதர்களோ அவர்களைப் பற்றி கொஞ்சமேனும் வெளிக்கொணர்ந்து சமூதாயத்தில் எது போற்றத்தக்கது, எது பலிக்கத்தக்கதென்று பறைசாற்றி அது போன்ற சமூதாய தொற்றுக்கிருமிகளை ஒழிப்பதில் பங்களிக்க முன் வர தயங்குகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது?


அவ்வாறு தடபுடலாக வரதட்சணைகளுடன் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்பது அவ்வூரின் எல்லா தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் அந்த ஊர் காவல் துறை மக்களும், செய்தித்தாள் நிருபர்களும் என்ன செய்து கொண்டு இருப்பார்கள்? இங்கு நமக்கு ஒரு கேள்வியொன்று எழலாம், தெகா, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு வரதட்சணை கொடுப்பதனைப் பொருட்டு என்று கேட்கத்தோன்றும்.


எதற்காக இதனை ஒரு விசயமாக பேச வேண்டுமென்றால், இருப்பவர்கள் ஆடிக்காமிக்கிறார்கள் என்றால் அதே சமூகத்தில் வாழும் இல்லாதவர்கள் அவ் நிலைக்கு மறைமுகமாக இட்டுச்செல்லப்படவில்லையா? இது கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு விசயமா? அதுவும், படித்த இளைஞர்களே சுய புத்தி இழந்து, தன்னை விற்று காசாக்கிக்கொள்ளும் அவலத்தை பார்த்துக்கொண்டு எப்படி சும்மாவே இருந்துவிட முடிகிறது நம்மால்? மேலும், இவர்களால் எப்படி இந்த ஒரு ப்ரக்ஞை உணர்விற்கேனும் வருவதற்கு முன்னால் ஒரு மனிதனை(மனைவியை) சம்பாதித்துக்கொள்ள முடிகிறது?!


இதன் உளவியல் பின்னணியில்தான் அது போன்று வாழ்க்கை நடத்த வந்த பெண்களில் சிலர் தனது கணவனையே தூக்கிப்போட்டு பந்தாடும் நிலையில் வைத்துக்கொள்கிறாரா, அட கடன்காரா என்று? ஆமாம், பிறகு எப்படி எடுத்துக்கொள்வது, ஒரு புது வரவு தன் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே கல்லூரி விடுதியில் தனது தங்கள், உணவிற்கென முன்பணம் கட்டிவிட்டு சேருவதனைப்போன்றல்லவா இந்த சூழ்நிலையும் இருக்கிறது. பிறகு பணம் கட்டி உள் நுழைபவர் வசதிக்கேணும் அந்த விடுதியில் இருப்பவர்கள் சற்று வளைந்து கொடுத்துப்போக வேண்டாமா? அவ்வாறு எதிர்பார்ப்பதில்தான் என்ன தவறு இருக்கிறது?


அதே மூடனால் தனிப்பட்ட முறையில் தன் வாழ்வியல் சார்ந்த நோக்கங்களைக் கொண்டு ஒரு மனுசியை கவர்ந்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடியுமா? தனது வாழ்க்கை முழுதும் முயன்றால் கூட முடியாது என்பதே நிசர்சனம். நாற்றமடிக்கும் சமூதாயமும், புரையோடிப்போன சம்பிரதாயங்களும், சகிக்கவில்லை இவர்களை மனிதர்களாக கண் கொண்டு பார்க்க. :-(

51 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: இது யார் மனதையும் புண்படுத்துவதாக அமைந்தால் அதற்கு இந்த கட்டுரை பொறுப்பல்ல!! மேலும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களும் இதிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் :-))

Anonymous said...

முதலில் வந்து யார் கல் வீசப்போகிறார்கள் ;)

சாலிசம்பர் said...

தெகா,நீங்க ரொம்ப படிக்கலாம்.ஆனா ரொம்ப சிந்திக்கக் கூடாது.:-)))

டண்டணக்கா said...

/*இதற்கு எதிர் மாறாக அவ்வூரிலேயே சற்றும் எதனையும் எதிர்ப்பார்க்காது சத்தமே இல்லாமல் இது போன்ற ஈனச் செயல்களில் நாட்டம் கொள்ளாமல் திருமணங்களை நடத்துபவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவ்வாறு இருந்திருக்கும் பச்சத்தில் ஏன் மக்களோ அல்லது வேறு நல்ல மனிதர்களோ அவர்களைப் பற்றி கொஞ்சமேனும் வெளிக்கொணர்ந்து சமூதயாத்தில் எது போற்றத்தக்கது, எது பலிக்கத்தக்கதென்று பறைசாற்றி அது போன்ற சமூதாய தொற்றுக்கிறுமிகளை ஒழிப்பதில் பங்களிக்க முன் வர தயங்குகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது?*/
Right question.
But, as we know...our/my society talks only what is comfortable to it/us, that includes not talking/asking what is right?.
Unfortunate to a society written Thirukural...Long way to go.

Thekkikattan|தெகா said...

ஜாலிஜம்பர் said...

தெகா,நீங்க ரொம்ப படிக்கலாம்.ஆனா ரொம்ப சிந்திக்கக் கூடாது.:-)))//

அட இருக்கட்டுமே ரொம்ப நாட்களாக நானும் அமைதியாத்தான் வேடிக்கை மட்டுமே பார்த்திட்டு இருந்தேன்... இந்த சந்தையில போயி மாடு வாங்குறத்துக்கும் இதுக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கா சொல்லுங்க, ஜாலி...

தெரியும் இந்தப் பதிவு மக்களின் மனத்தில் என்னாத்தை விட்டுச்செல்லும் என்று... ;)))

சிவபாலன் said...

தெகா,

இவர்களை எதால் அடிக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

சமுதாய எண்ணம் ஒட்டு மொத்தமாக மாற வேண்டும். இது போன்ற கேவலங்கள் அழியவேண்டும்..

இது சம்பந்தமான சில கருத்துக்களுடன் மீண்டும் வருவேன்.

Unknown said...

தெகா

காதல் மணம் நடந்தால் தான் இந்த வரதட்சணை கொடுமை அழியும் என நினைக்கிறேன்.வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை

Thekkikattan|தெகா said...

//அனானி 1,

முதலில் வந்து யார் கல் வீசப்போகிறார்கள் ;) //

கல்லையே காணமே, வீசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டுமோ :-P

சிவபாலன் said...

தெகா

என்னுடைய சில கேள்விகள் - பதில் வேண்டி

1. அமெரிக்கர்களுக்குள் இது போல் வரதட்சனை கொடுமை இருக்கிறதா?

2. ஒரு வேளை இந்த பாலின விகிதாச்சாரம் மாறி பெண் விகிதாச்சாரம் மிகவும் குறைந்துவிட்டால் நிலைமை என்ன வாகும்?

மேலும் சில கேள்விகள் இருக்கிறது பிறகு வருகிறேன்.. பதிவின் முக்கியதுவம் அப்படி..

நன்றி

Thekkikattan|தெகா said...

சிவா,

சாத்தலான கேள்விகள் ;-))!!

//1. அமெரிக்கர்களுக்குள் இது போல் வரதட்சனை கொடுமை இருக்கிறதா?//

எனக்கு தெரிஞ்சு எவனாவது அப்படி கேட்டுவைத்தால் கண்டிப்பாக எதிர்த்தாப்பில் நின்று கேக்கும் அவனது பெண் நண்பி, உடனடியாக அந்த ஆடவனை அவன் வீட்டிற்கு சென்று "டயபரை" அம்மாவிடம் சொல்லி மாற்றிக்கொண்டு வருமாறு கேட்டுவைப்பாள் என்பது உறுதி... :-)) சரி நகைச்சுவை அந்தப்பக்கம் இப்பொழுது செய்தி...

அப்படி எனக்குத்தெரிந்து ஒன்று நடப்பதாக தெரியவில்லை. ஆனால், பல காலங்களாக டேட்டிங் செய்து வரும் ஜோடிகள், ஆடவன் தன் (கட்டிக்கப் போகும்)பெண் விரும்பிய "வைர மோதிரம்" வாங்க இயலாமல் இருக்கும் பட்சத்தில் திருமண தேதியை ஒத்திப்போட்டு காத்திருக்கும் சமயங்கள் உண்டென பார்த்ததுண்டு.

மற்றுமொரு உபரித்தகவல், இங்கே திருமணச் செலவுகளை ஜோடிகள் இருவருமே சமமாக பிரித்து (தன் உழைப்பின் மூலமாக ஈட்டிய பணத்தில்) சிலவுகளை நேர் கொள்கிறார்கள்.

அதனைதாண்டி இந்த நம்மூர் "டவுரி" விசயம் இங்கு தினசரிகளில் படிக்கப்படும் பொழுது இது ஒரு "தேர்டு வேர்ல்டு க்ரானிக் மெண்டல் சிக்னெஸ்" எனவே அலைக்கப்பட்டு பார்க்கப்படுகிறது.

அடுத்த கேள்விக்கான பதில் கொஞ்சம் விபரமாகவே பார்க்கப்போவதால் தனி பின்னூட்டமாக போட்டுவிடுகிறேன் ;-)

சிவபாலன் said...

// Third World Chronic Mental Sickness // ("தேர்டு வேர்ல்டு க்ரானிக் மெண்டல் சிக்னெஸ்)//



தப்பா நினைச்சுக்காதீங்க..

செருப்புலையே அடித்த மாதிரி இருக்கு..

எவ்வளவு தொன்மையான சமுதாயம் நம்முடையது..

இவ்வளவு பெரிய கேவலத்தை எப்படி தொடர்து செய்து வருகிறதோ..??!!

Thekkikattan|தெகா said...

சிவா, பின்னூட்டத்தின் தொடர்ச்சி...

//2. ஒரு வேளை இந்த பாலின விகிதாச்சாரம் மாறி பெண் விகிதாச்சாரம் மிகவும் குறைந்துவிட்டால் நிலைமை என்ன வாகும்?//

இப்படியெல்லாம் யோசிச்சோமின்னு வைச்சுக்கங்களேன் சிவா, இந்த சிசுக்கொலையெல்லாம் டக்கின்னு நின்னுடும். ஒண்ணுமில்லை ஒரு ஊரில் இப்படி இருந்தா எப்படி இருக்கும்... இப்ப உதாரணத்திற்கு சேலம், தருமபுரி மாதிரி ஊர்களை எடுத்துக்குவோம். அங்குதானே அதிகமான பெண் சிசுக்கொலை நடக்குது. அது ஒரு தனி மொழி பேசுற மாநிலமா இருந்து, ஆண்களும் பல் அவிஞ்சு போயி, சோம்பேறிகளா இருந்து, அதுக்கெல்லாம் மேல ரிஸ்க் எடுக்கவே பயப்படுற கூட்டமா இருந்து போய்... அங்கேயே இந்த பால் விகிதாச்சாரம் அதாவது ஒரு பெண்ணுக்கு மூன்று ஆடவர்கள் (1:3) இருக்கிறார்கள் என்ற நிலையில் அங்கு இருக்கும் ஆடவர்களின் நிலையென்னவாக இருக்கும்.

டார்வின் உயிர்ப்பெற்று வந்துவிடுவார் தியரி லெவலிலிருந்து, நடை முறைக்கு. தள்ளுமுள்ளு நடக்கும், கோர்ட்ஷிப் டிஸ்ப்ளே உச்சத்தில் கொடிகட்டி பறந்து, பெண்கள் அமைதியாக ஷோவை பார்த்து ரசித்துவிட்டு விரல் எந்தப்பக்கம் நகர்கிறதோ அவர்களுக்கு அடித்தது லோட்டோ, மற்றவர்கள் திண்ணையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். :-)). இப்பவே எத்தனை ஷாருக்கான், சல்மான் கான்கள் பேருந்து நிலையங்களில் கலர் கலராக, அப்படி ஒரு நிலை வந்தால்... அடடா நினைச்சுப்பார்க்கவே இந்த டயபர்(டவுரி) பசங்களின் நிலமையை அன்று கஷ்டமாக இருக்கிறதே...

அப்படி ஒரு நாள் வருமோ!!

Unknown said...

தெகா

சும்மா வரதட்சிணை எதிர்ப்பு பதிவு போட்டால் எல்லோரும் வந்து முற்போக்கு வேசம் போட்டு பின்னூட்டம் போடுவார்கள்.விஷயம் அத்துடன் முடிந்துவிடும்.இந்த பதிவிலோ அல்லது தனிபதிவிலோ கீழ்கண்ட உறுதிமொழியை எல்லோரும் எடுக்க தயாரா என்று கேளுங்கள்.let people walk their talk.


1.கல்யாணம் ஆகாத ஆணாகிய நான் உயிரே போனாலும் வரதட்சனை வாங்க மாட்டேன், என் வீட்டிலும் வாங்க விடமாட்டேன்

2. கல்யாணம் ஆகாத பெண்னாகிய நான் வரதட்சிணை கேட்கும் ஆணை கண்டிப்பாக திருமணம் செய்ய மாட்டேன்.

3. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.நான் வரதட்சிணை வாங்கவும் இல்லை/கொடுக்கவும் இல்லை

4.நான் வரதட்சிணை வாங்கவேண்டிய சூழல் நேர்ந்து விட்டது(குடும்ப வற்புறுத்தல்,எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது). நான் அந்த பணத்தை மாமனாருக்கு உடனடியாக திருப்பி தந்துவிடுவேன்.

நம்மில் எத்தனை பேர் இந்த உறுதிமொழிக்கு தயார்?

Thekkikattan|தெகா said...

செல்வன்,

ஆமா, நீங்க சொல்றபடி அந்த முற்போக்கு வேசம் போட்டு பேசுற ஆட்களைக்கூட இந்தப்பக்கம் காணலையே ;)

கொடுத்த ஐடியாவும் நன்றாகத்தான் இருக்கிறது...

//3. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.நான் வரதட்சிணை வாங்கவும் இல்லை/கொடுக்கவும் இல்லை// - நான் இதனில் அடங்குவதால்தான் இந்தப் பதிவே இங்கே. இல்லைன்னா, நானும் முக்காடு போட்டுக்கிட்டு வந்து வாசிச்சிட்டுப்போயிருப்பேன் :-P

.....4.நான் வரதட்சிணை வாங்கவேண்டிய சூழல் நேர்ந்து விட்டது(குடும்ப வற்புறுத்தல்,எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது). நான் அந்த பணத்தை மாமனாருக்கு உடனடியாக திருப்பி தந்துவிடுவேன்..... இதெல்லாம் நடக்கிற காரியமா நீங்களே சொல்லுங்க

சிவபாலன் said...

// //3. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.நான் வரதட்சிணை வாங்கவும் இல்லை/கொடுக்கவும் இல்லை// - நான் இதனில் அடங்குவதால்தான் இந்தப் பதிவே இங்கே. இல்லைன்னா, நானும் முக்காடு போட்டுக்கிட்டு வந்து வாசிச்சிட்டுப்போயிருப்பேன் :-P //



ரிப்பீட்டே..

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

தெகா,

சாமவேதி, யாசுர்வேதி,பன்டித வித்தியாதி, போன்ற பார்பன
கூட்டம் சொல்லும் மந்தரத்தால்??? மாப்பிள்ளை
வீடு பாதிக்காது.

Unknown said...

தெகா,சிவபாலன்

உங்கள் இருவரின் நிலைபாடும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.உங்களை போலவே நானும் வரதட்சிணை,தலைதீபாவளி,பிரசவ செலவு என எதையும் மாமனார் தலையில் கட்டும் இழிவான செயலை செய்யவில்லை.

சிலர் தெரியாமல் வரத்ட்சிணை வாங்கியிருந்தாலும் இப்போது மனம் திருந்தியது உண்மை என்றால் அதை திருப்பி தருவதுதான் முறை.ஏன் என்றால் இதனால் கடன்பட்டு நொந்த மாமனார்,அண்னன்களுக்கு அது நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும்.அதுபோக நியாயம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

கொடுப்பார்களா இல்லையா என்பது வேற விசயம்.ஆனால் நீதி எதுவோ அதை சொல்லிவிட வேண்டுமில்லையா?

Thekkikattan|தெகா said...

//தப்பா நினைச்சுக்காதீங்க..

செருப்புலையே அடித்த மாதிரி இருக்கு..

எவ்வளவு தொன்மையான சமுதாயம் நம்முடையது..

இவ்வளவு பெரிய கேவலத்தை எப்படி தொடர்து செய்து வருகிறதோ..??!! //

நீங்க எதனாலே வேண்டுமானாலும் அடிச்சுக்கோங்க ;) நான் குறுக்கே வரவே மாட்டேன்.

பிறகு சிவா, ஒரு ஐம்பது வருஷங்களுக்கு முன்பு வரை எனது தாத்தாவெல்லாம் ஆடு, மாடு பெண் வீட்டிற்கு கொடுத்து சும்மா ஜெண்டில்மேன் கனக்கா எனது பாட்டியை கட்டிக்கொண்டு வந்திருக்காங்க (அதுக்காக அது தப்பில்லையான்னு கேக்கக்கூடாது)...

இந்த கருமாந்திரம் இப்பத்தான் கொஞ்ச நாட்களாக தொடங்கியிருக்க வேண்டும்... போய் நடு வீட்ல உட்கார்ந்துகிட்டு எவன் வீட்டோ பஜ்ஜியையும், காஃபியையும் குடிச்சிக்கிட்டு பேரம் பேசிர கேடுகெட்டத்தனம். இதுவும் ரொம்ப நாளைக்கு நிக்காது. இதோ கிளம்பிட்டாங்க பெண்கள் எல்லாம் ஏர்போர்ட்டுக்கு ;)

துளசி கோபால் said...

செல்வன் & தெ.கா,

//3. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.நான் வரதட்சிணை வாங்கவும் இல்லை/கொடுக்கவும் இல்லை//

இந்த வகையில் நான் இருக்கேன்:-)

என் பெண்ணுக்கும் நோ வரதட்சணை.

Thekkikattan|தெகா said...

//துள்சிங்க,

இந்த வகையில் நான் இருக்கேன்:-)

என் பெண்ணுக்கும் நோ வரதட்சணை. //

இப்படி பெண் வீட்டில் தீர்க்கமாக கூறிவிட்டால் இஷ்டப்பட்டவர்கள் மற்றுமே அடுத்த அடிக்கு முன்னே வரட்டும், மற்றதுகள் அங்கேயே வடிகட்டப்பட்டு பக்கத்திலிருக்கும் swampல் போட்டுவிடலாமல்லவா டீச்சர். உங்க மாதிரி பெண்களைப்பெற்ற அம்மாக்கள் அனைவரும் இருந்துவிட்டால் கொஞ்சம் கொட்டம் அடங்கும் இதுகளுக்கு ;-))

காட்டாறு said...

தெகா, நீங்க சொல்லுவது போல் ஆண்கள் திருந்தட்டும் என இருந்த காலம் மாறியதால் தான், இன்று பல பெண்கள் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என தைரியமாக சொல்லுகின்றனர். சொல்வது எளிதல்லவா? அப்போ என்ன செய்யனும்? தன் நிலையை முன்னேற்றனும் இல்லையா? அதைத் தான் கல்வி தந்திருக்கிறது. கொஞ்சம் பொறுங்க.... மாற்றங்கள் உடனடியாக வருவதில்லை. நம்ம பிள்ளைங்க காலத்தில் கண்டிப்பா இப்போ இருக்கும் அளவுக்கு இருக்காது என்பது என் கருத்து.

காட்டாறு said...

கொசுறு செய்தி: எங்கள் குடும்பத்தில் பெரிய NO to Dowry. எங்க அப்பாவும் வாங்கல. அவங்க குழந்தைகளுக்கு வரதட்சணை கொடுக்கவும் இல்லை; வாங்கவும் இல்லை.

ALIF AHAMED said...

வரதச்சனையே வாங்க மாட்டேன் அப்படினு கொள்கை உறுதியுடன் மூன்று வருடம் இருந்த நான் பட்ட அவமானம் எவ்வளவு தெரியுமா...??

மப்பிள்ளைக்கு எதோ குறையிருக்குனு சொல்லி எத்தனை எத்தனை நிகழ்வுகள்......

ஆம்பிள்ளையா.. இருக்க மாட்டானோ என்று எத்தனை கேள்விகள்

எதுமே நாங்கள் கொடுக்க வில்லையென்றால் இந்த ஊரு எங்களை காறி தூப்பாதா என்று பெண் வீட்டாரின் புலம்பல்கள்

வாங்கினால் எங்களை காறி தூப்பாதா என்ற எதிர் கேள்விகளுக்கிடையே

எந்தவித கொடுக்கல் வாங்கல் பேச்சி இருக்க கூடாதென்று உறவுவில் முடிக்க வேண்டிய கட்டாயம்

என்று திருந்தும் இந்த சமுதாயம் ...??



குறிப்பு: ஊரில் பெண்ணே இல்லையா என்ற கேள்வி வந்தால் எனக்கு என் குடும்பத்திற்கு பிடித்த பெண் மட்டுமே

இது எனது உண்மை சம்பவம் !!!

மங்கை said...

சாரி நோ கமென்ட்ஸ்...தெகா.. ஜூட்

Thekkikattan|தெகா said...

வாங்க டண்டணக்கா,

//Right question.
But, as we know...our/my society talks only what is comfortable to it/us, that includes not talking/asking what is right?.
Unfortunate to a society written Thirukural...Long way to go. //

நீங்க சொல்வது உண்மையோ உண்மை!! நீண்ட தொலைவு தான் செல்ல வேண்டி உள்ளது, ஆனால், இதற்கு என்னதான் தீர்வு. இந்த விசயம் பந்தலில் வைத்தே சத்தம் போட்டு பேசப்பட வேண்டிய ஒரு விசயம்.

திருக்குறல் இரண்டு மதிப்பெண்கள் எடுப்பதற்காக பள்ளிகளில் சிறுவர்களுக்கு சொல்லித்தருகிறார்களே அதனையா சொல்கிறீர்கள்... :-)) அது அத்தோடு அல்லவா முடிந்து விடுகிறது என்று நினைத்தேன்...

Thekkikattan|தெகா said...

மங்கை, இப்படிச்சொல்லி எல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். நீங்க வந்து இந்த "சிக்னெஸ்"க்கு என்ன பொதுக்காரணமிங்கிற விளக்கியாகணும்... சொல்லிட்டேன்

Thekkikattan|தெகா said...

செல்வன்,

//காதல் மணம் நடந்தால் தான் இந்த வரதட்சணை கொடுமை அழியும் என நினைக்கிறேன்.வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை...//

எனக்குத்தெரிந்தவரை செல்வன், காதல் மணம் செய்வதற்கெல்லாம் அசாத்திய தைரியமும், பொறுப்புணர்வும், வாழ்க்கையைப்பற்றிய தெளிவும் தேவைப்படுகிறது. அங்கே, அன்பை மட்டுமே நம்பி வாழ்க்கை துவங்கப்படுகிறது. இருவரிடத்திலும் புரிந்துணர்வு தலைதிருக்கும் வரைக்கும் அந்த வாழ்வில் உயிர்ப்பு இருக்கிறது.

ஆனால், இந்த டவுரி வாழ்வில் அன்பை முதலில் 'கொன்று' விட்டு அதன் மீது ஒரு கட்டடம் எழுப்பப்படுவதுபோல் ஓர் வாழ்வு தொடங்கப்படுகிறது, ஒரு பாதுகாப்பு வளையத்திற்கு மேலே இருந்து (அதாவது அவர்களின் சொந்த பந்தங்களின் அரவணைப்புடன், பாதுகாப்புடன் - வாழ்வு தலைத்தோங்கும் என்ற எதிர்பார்ப்புடன்...). இதற்கு எந்த விதமான தகுதியும் தேவையில்லை...

Thekkikattan|தெகா said...

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

தெகா,

சாமவேதி, யாசுர்வேதி,பன்டித வித்தியாதி, போன்ற பார்பன
கூட்டம் சொல்லும் மந்தரத்தால்??? மாப்பிள்ளை
வீடு பாதிக்காது. //

இது வேறயா? ஒரு மருத்துவ காப்பீடு, உயிர் காப்பீடு மாதிரி எல்லாத்துக்கும் ஒரு பரிகாரம் இருக்கும் போல... பின்னாடி வாங்கின கைக்கு ஸ்ட்ரோக் ஏதுவும் வந்திடாம பாது காத்துக்க... நல்ல நகைச்சுவை :-))

மங்கை said...

தெகா..

சில வீட்ல நடக்குறத சொல்றேன்..

பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆனா போதும்னு பெற்றோர்கள் அளவுக்கு அதிகமா சீதனம் கொடுத்து அனுப்பி வைக்குறாங்க...

காசு கொடுத்துட்டோம் பொண்ண நல்லா பார்த்துக்கனும்.. பார்த்துக்குவாங்கன்னு நெனப்பு.

இவ்வளவு குடுத்தாங்களே...இன்னமும் குடுத்தா என்னன்னு இந்தப்பக்கம் எதிர்பார்ப்பு..

அது எப்படி கேட்கலாம்...உனக்கு தெரிஞ்சு தானே குடுத்தோம்,உன் புருஷனுக்கு சொல்லக் கூடாதான்னு பிறந்த வீட்ல போட்டு வேற குடுப்பாங்க...

இதுல நடுவுல அந்தப் பொண்ணு நொந்து நூடுல்ஸ் ஆகறது தான் மிச்சம்..

வீட்ல கூடப் பிறந்த ஆண்கள் இருந்தா அந்தப் பொண்ணோட நிலமை இன்னும் மோசம்...எதிர்ப்பார்ப்பும் எதிர்ப்பும் கணவர் வீட்லே அதிகம்...

மனம் அறிந்து (சில) பெற்றோர்கள் இந்த தவறை செய்வதில்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளலாம்...

பெருமைக்காக பெரிய இடத்தில் சம்பந்தம் பேச வேண்டியது...அதற்கு ஏற்றாற்போல் வரிசை செய்யவேண்டிய கட்டாயம்...இது எல்லாம் தேவையா?
இதில் எந்த பெற்றோரை குறை கூற..

பாதிக்கபடுவது மட்டும் எப்பொழுதும் பெண் தான்

சிவபாலன் said...

தெகா

என்ன.. ஒருத்தரையும் கருத்து சொல்லக்காணோம்..

வரதட்சனை எனும் கேவலத்தை பற்றி பேச ஆளே இல்லையா? ஒரு வேளை எல்லோரும் ரொம்ப பிஸி போல..

தெகா, பேசாம ஒரு சர்வே போடுங்க..

அப்பவாவது ஏதாவது ரெஸ்பான்ஸ் இருக்காங்கன்னு பார்க்கலாம்.

Suka said...

"இஞ்சினியரிங் காலேஜ்ல படிக்கறதுக்கு செலவு மூணு நாலு லட்சம் செலவாகுது ..அப்ப அந்த காச யார் கொடுப்பா .. கட்டிக்கிற பொண்ணு தான கொடுத்தாகனும்.." அப்பிடின்னு ஒருத்தர் சொல்றத கூட கேட்டு பக்கத்துல சுவரு எதுவும் இருக்கா முட்டிகிறதுக்குன்ன் தேடீருக்கேன்.

அதுவுமில்லாம வரதட்சிணை கொடுக்கறவங்கள விட ..அத வாங்கறதயும் பெருமையா பேசறவங்கள என்ன பண்ணறது..

செல்வனின் முதல் பாயிண்டை நானும் ஆமோதிக்கிறேன்.

"நாம எதுவும் கேக்கவேண்டாம்டா.. அவுங்களா பார்த்துச் செய்யறத தடுக்கவா முடியும் " என்ற பிடிக்கு "சரி சரி .. ஒன்னும் தடுக்க வேண்டாம், ஆனால் நானும் தலை தீபாவளிக்கு மாமனார்க்கு காரும் மாமியார்க்கு ஒட்டியாணமும் வாங்கித் தருவேன்.. நீயும் என்ன தடுக்க வேண்டாம்" ன்னு சொல்லி விதண்டாவாதி பட்டத்தோடு சந்தோசமா இருக்கேன். போன தலைமுறை கூட மோதுறது லேசுப்பட்ட வேலையில்ல...

சுகா

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

சொல்வது எளிதல்லவா? அப்போ என்ன செய்யனும்? தன் நிலையை முன்னேற்றனும் இல்லையா? அதைத் தான் கல்வி தந்திருக்கிறது. கொஞ்சம் பொறுங்க.... மாற்றங்கள் உடனடியாக வருவதில்லை. நம்ம பிள்ளைங்க காலத்தில் கண்டிப்பா இப்போ இருக்கும் அளவுக்கு இருக்காது என்பது என் கருத்து. //

எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மிகவும் ஆமை வேகத்தில் நகருகிறதே என்ற ஆதங்கம்தான் கொஞ்சம். நீங்க சொன்ன முன்னேற்றம் வந்தாலும் சில குடும்பங்களில் இது மாறின மாதிரி தெரியலையே, ஏன் அப்படி?

ம்ம்... உங்க குடும்பம் ஒரு தைரியமானது, தெளிவானது என்று தெரிகிறது, வாழ்த்துக்கள்!

சிவபாலன் said...

மனைவி வரதட்சணை புகார் விஞ்ஞானி குடும்பம் கைது


விருத்தாசலம், செப். 12-
ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் விஞ்ஞானி குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

செய்தி: தமிழ் முரசு நாள்:12-09-07

Thekkikattan|தெகா said...

டாக்டர்,

/./சில இடங்களில் குமரி மாவட்டம் மாதிரியான ஊர்களில், பெண்வீட்டார் வரதட்சிணை கொடுப்பதை மிக பெருமை யாக கருதுகின்றனர். //

இந்தப்பொது புத்தியினால்தான் டாக், லஞ்ச லாவன்யங்கள், கறுப்புப்பணம், கல்லச்சாராயம் போன்றவைகள் தலைத்தோங்குகிறது. எப்படியாவது பணத்தைப்பெருக்கி மற்றவர்களை கீழே போட்டு மிதித்து தான் யார் அப்படின்னு இந்த நாற்றமடித்தப்பணத்தை காமித்து சமூகத்தில் தானும் ஒரு ஆள் அப்படின்னு காமிச்சுக்கத் தோணுது.

//அதுவும் இப்போ soft ware engineer களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.//

இதுக்கு இவனுக பிச்சை எடுத்து பொழப்ப நடத்தலாம்... அரைகுறைகள்... அட மறந்திட்டேன் இது போன்ற மாடுகளுக்கு சந்தையில் கொஞ்சம் டிமாண்ட் ;-))))

சிவபாலன் said...

முழுமையான செய்தி கிழே:

அவசியம் கருதி முழுமையாகக் கொடுக்கிறேன்.

நன்றி: தமிழ் முரசு.

------------------------

விருத்தாசலம் ஆலடி ரோட்டைச் சேர்ந்தவர் மணியன் மகன் தேன்மொழி (30). பிஎஸ்சி பட்டதாரியான இவர், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன் (35). உறவினர் என்பதால் சிறு வயதிலேயே அவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2002-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். என் கணவருக்கு தென்கொரியா நாட்டில் விஞ்ஞானி வேலை கிடைத்தது. இருவரும் அங்கு சென்றோம். சில நாட்களில் நான் கர்ப்பமானேன். குழந்தை சரியான வளர்ச்சி இல்லை என்று டாக்டர் கூறியதால் என்னை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார். இங்கு வந்ததும் என் மாமியார் ராஜாமணி, மாமனார் கலியன், நாத்தனார் வசந்தா ஆகியோர் கட்டாயப்படுத்தி என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தனர்.
கணவர், மாமியார், நாத்தனார் ஆகியோர் ரூ. 5 லட்சம் வரதசட்ணை கேட்டு என்னை விரட்டிவிட்டனர். கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தேன்மொழி கூறியிருந்தார். போலீசார் அழைத்து சமரசம் பேசியும் தேன்மொழியுடன் குடும்பம் நடத்த கருப்பையன் மறுத்ததால் அவரையும் அவரது பெற்றோரையும் கைது செய்தனர். வசந்தாவை தேடி வருகின்றனர்

Thekkikattan|தெகா said...

மின்னுது மின்னல்,

வாங்க, வாங்க! வந்து முக்கியமான சமூதாய அழுக்குத்தனமான ஒரு பொது புத்தியப்பத்தி சுட்டிக்காமிச்சிருக்கீங்க. என்னோட அடுத்தப்பதிவு நீங்க சொன்ன விசயமாத்தான் எழுதலாமின்னு நினைச்சுட்டு இருந்தேன் நீங்க உடைச்சு அனுபவப்பூர்வமாக எழுதி விட்டீர்கள்.

இன்னும் இந்த சந்தேகப்பார்வையில் பெரிய, பெரிய வியாதிகள் எய்ட்ஸ், gayயாக இருந்து மறைத்து திருமணம் செய்து வைக்கப்பாக்குறார்களோ என்ற புத்திக்கெட்டத்தனமாவெல்லாம் பெண் வீட்டார் நினைப்பதும் இதில் அடங்கும்.

எல்லாம் அறிவிலித்தனமன்றி வேறு என்ன மின்னுது மின்னல். கமல், தேவர் மகனில் சொன்னது போல... போங்கடா போயீ புள்ளைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கடான்னு சொல்லத்தான் தோணுது...

உங்களுக்கு நடந்ததை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதனைப் பொருட்டு நீங்கள் துண்டுப் பிரசுரங்கள் அடித்து கிராமம் கிராமாக வினியோகிக்க வேண்டும் மின்னுது மின்னல்...

Thekkikattan|தெகா said...

மங்கை,

//பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆனா போதும்னு பெற்றோர்கள் அளவுக்கு அதிகமா சீதனம் கொடுத்து அனுப்பி வைக்குறாங்க...

காசு கொடுத்துட்டோம் பொண்ண நல்லா பார்த்துக்கனும்.. பார்த்துக்குவாங்கன்னு நெனப்பு.//

அதாவது எல்லா இடத்திலும் லஞ்சம் கொடுத்து வேலையை முடிப்பது போலவே இங்கும்...

அருமையாக ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் நிகழும் பொது எண்ணவோட்டத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறது உங்களின் பின்னூட்டம்.

இது போன்று விசயங்களை பகிர்ந்து கொண்டு சிலருக்கேனும் தான் என்ன செய்கிறோம் என்கிற உணர்வை ஊட்டக்கூடியதாக இந்தப் பதிவும், பின்னூக்கிகளும் அமைந்தாலே போதும்.

நன்றி, மங்கை!

ஆடுமாடு said...

நல்லதுதான். நீங்கள் பார்த்த விஷயம் எங்கோ இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. என் கல்யாணத்தில் நான் வரதட்சணை வாங்கவில்லை. என் ம்னைவியின் வீட்டிலிருந்து தங்க சங்கிலியையும் மோதிரத்தையும் அணிவித்தார்கள். இதை நான் கேட்டுப் பெறவில்லை. திருமணம் ஆன மூன்று நாட்கள் மட்டுமே சங்கிலி அணிந்திருந்தேன். பிறகு, இன்று வரை பீரோலில் தூங்குகிறது. ஊருக்கு, மனைவியின் ஊருக்கு போனால் மட்டுமே அந்த சங்கிலி. அதுவும் ஏனென்றால், நீங்கள் போடவில்லையென்றால் அடகு வச்சிட்டீங்களா? வித்துட்டீங்களா? என்ற கேள்வி எழும் என்பதற்காகத்தான். இது என் சொந்தக் கதை.

இம்மாதிரியான வரதட்சணை பிரச்னை ஒழிய கிராமங்களில் பெண்கள் படிக்க வேண்டும். என் உறவினரின் மகள் சாப்ட்வேர் லைனில் இருக்கிறார். காதல் திருமணம்தான்.இருவருக்குமே நல்ல சம்பளம். வரதட்சனை வாங்கவில்லை. கொடுக்கவில்லை. இன்னும் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறாள். இதே போல் நடந்த சில திருமணங்களையும் நண்பர்கள் மூலமாக கேள்வி பட்டிருக்கிறேன். வருங்காலத்தில் மெல்ல இனி சாகும் வரதட்சணை. நம்பிக்கைதான் லைஃப்.
ஆடுமாடு

தருமி said...

குற்றவாளிகள் நீதி பேசக்கூடாது. மெளனமாகிறேன்.

//நம்ம பிள்ளைங்க காலத்தில் கண்டிப்பா இப்போ இருக்கும் அளவுக்கு இருக்காது என்பது என் கருத்து.//

இப்படித்தான் நானும் 30 வருடங்களுக்கு முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். ம்ம்..ம்.. எதுவும் மாறவில்லை. inflation-க்கு ஏற்றாற்போல் மாறி விட்டன ரேட்டுகள்.

:(

Thekkikattan|தெகா said...

வாங்க சுகா!

//இஞ்சினியரிங் காலேஜ்ல படிக்கறதுக்கு செலவு மூணு நாலு லட்சம் செலவாகுது ..அப்ப அந்த காச யார் கொடுப்பா .. கட்டிக்கிற பொண்ணு தான கொடுத்தாகனும்.."//

இதனை விட ஒருவன் நான் ஒரு வியாபாரி அப்படிங்கிறதை எப்படி கொச்சையாக சொல்லிக்கொள்ள முடியும் சொல்லுங்க. அந்த ஒரு எதிர் பார்ப்பே தனக்கு அடிப்படையில் ஒரு பெண்ணை வைத்து குடும்பம் நடத்த தகுதியில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி கூறிய பிறகும் அரசாங்க உத்தியோகம் அவருக்கு கொடுக்கும் மாதச் சம்பளத்தை முன்னிறுத்தி கட்டிக்கொடுக்க எத்தனிக்கும் பெண் வீட்டார்களை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது. ஒரு மனிதனாக தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிக்கொணர்ந்தும், புரிந்து கொள்ளலாமல் பெண் வீட்டர் அடுத்த அடிக்கு முன்னேறுகிறார்கள் என்றால் அங்கே நடப்பது மங்கை சொன்ன கணக்கு வழக்குத்தான்...

பரவாயில்லை, நீங்களாவது எங்கேடா குட்டிச்சுவர் என்று மோதிக்கொள்ள பார்த்திருக்கிறீர்கள், நானாக இருந்திருந்தால் "டயபர்" வாங்கிக்கொள்ள கடைக்கு கூட்டிச்சென்றிப்பேன்... :-))

Thekkikattan|தெகா said...

சிவா,

இங்கே அடிக்கடி வந்து இந்தப் பதிவில் இன்னும் நிறைய இது தொடர்பான விசயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி இத்தருனத்தில்...

பத்மா அர்விந்த் said...

தெகா
ஆரம்ப நாட்களில் பெண் கணவனோடு இணந்து வாழ முடியாவிட்டால் பலனாக இருக்கட்டும் எனுர் சீதனம் தந்திருப்பார்களாக இருக்கும். எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. என் கருத்துக்கள் http://reallogic.org/thenthuli/?p=54
http://reallogic.org/thenthuli/?p=51

சகோதரிகளுக்குள் போட்டி ஏற்பட்டு எனக்கு குறைவாக செய்தீர்களே, அந்த மாப்பிள்ளை மட்டும் என்ன உசத்தியா, இன்னும் எனக்கு சீர் செய்யுங்கள் என்று போட்டி போட்ட கதைகளும் உண்டு.

Thekkikattan|தெகா said...

தருமி,

//குற்றவாளிகள் நீதி பேசக்கூடாது. மெளனமாகிறேன்.

//நம்ம பிள்ளைங்க காலத்தில் கண்டிப்பா இப்போ இருக்கும் அளவுக்கு இருக்காது என்பது என் கருத்து.//

இப்படித்தான் நானும் 30 வருடங்களுக்கு முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். ம்ம்..ம்.. எதுவும் மாறவில்லை. inflation-க்கு ஏற்றாற்போல் மாறி விட்டன ரேட்டுகள்.

:( //

இந்தப் பதிவின் நாடியாக உங்களின் பதில் அமைந்திருக்கிறது. 30 வருடங்கள் கழித்தும் நிறைய இளைஞர்கள் இங்கு இன்னமும் மெளனமாக இருக்கிறார்கள் போல. எனவே, நீங்கள் சொன்ன inflation at play என்று வைத்துக் கொள்கிறேன் :-)(.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம் தெகா,

வரதட்சணையின் கூறுகள் இப்பொழுது வேறு வகையில் வடிவமெடுத்திருப்பதாகவே எனக்கு படுகிறது.

பட்டுக்கோட்டை நகரைச்சுற்றிய கிராமங்களில் முசுறி கிராமங்கள் என்று ஓரு அமைப்பு உண்டு... அவர்கள் கல்யாணத்தன்று 'முடிச்சு' (அ ) 'முழுச்சி' என்று ஓன்று மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பார்கள் அதில் எவ்வளவு பணமிருக்கும் என்று பார்த்தால் நான் அறிந்தவரை குறைந்த தொகையே பத்து லட்சம் அது மட்டுமல்லாமல் ஓரு கிலோ தங்க நகைகள் என்று கொடுக்கிறார்கள்.

ஏன்? இது நடக்கிறது என்று பார்த்தால்... பெரும்பாலும் கெளரவப்பிரச்சினை...

இன்னும் சில இடங்களில் பெண்ணுக்கு சரி பாதி சொத்துரிமையிருப்பதால்... சொத்தில் பாதி அளவுக்கு செய்கிறார்கள். பிற்காலத்தில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்கக்கூடாது என்பதற்க்காக!

அதுவே அருகில் உள்ள அதிராம்பட்டிணம் என்கிற ஊரில் இசுலாமியர்கள் வேறுவகையான முறையை கையாள்கிறார்கள். வீடு கொடுத்து மாப்பிள்ளை தன் பொற்றோரை விட்டு அந்த புதுவீட்டிற்க்கு செல்ல வேண்டும் என்று பெண் வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள்.

இப்படி வடிவங்கள் வேறு வேறாக தமிழ் சமூகத்தில் வரதட்சணை கூறுகள் இருக்கின்றன.

Anonymous said...

good one!!!

Thekkikattan|தெகா said...

வவ்வால் அவர் பதிவில சொன்னது...

...கொழுத்த மாப்பிள்ளையை தூண்டில் போட்டு பிடித்து என்ன செய்ய உத்தேசம், அவர்கள் பெண் போகும் இடத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை தானே, ஆனால் எத்தனை செலவு செய்தாலும் பெண்ணை சித்திரவதை செய்தால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்!

பெண்ணைப்பெற்றோர் எத்தனைக்கஷ்டப்பட்டாவது பணத்தை கொடுக்க தயாராக இருந்தாலும், பெண் சந்தோஷமாக அங்கே இருக்க உத்திரவாதம் இல்லையே!...


சரி, இங்கு பேசிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி.

பெண் வீட்டார் தன்னுடைய செல்வாக்கை காமிக்கவோ, அல்லது கொழுத்த மாப்பிள்ளையைப் பிடிக்கவோ, அல்லது தன்னுடைய மகளின் நல் வாழ்விற்கோ எதற்கோ ஒன்றுக்கு பணத்தை முதலீடாக வழங்க முன் வருகிறார்கள், அப்படித்தானே.

சரி, இந்தச் சூழலில் பணமே முன் நிறுத்தப் படுகிறது. அது தானே முன் வந்து கொடுத்தாலும் சரி, அல்லது பேரம் பேசி மாப்பிள்ளை வீட்டார் (அது க்ளியர்) கேட்டாலும் சரி - அங்கே நிகழ்வது என்ன வடிகட்டிய அயோக்கியத் தனமான பொருளாதார கணக்கு வழக்கு.

அதிலும் மாப்பிள்ளை வீட்டாரே முன் வந்து பேரம் பேசும் பொழுது தாங்களே "என் அப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு ஒத்துக்கிற மாதிரி," நாங்க வடிக்கட்டிய அயோக்கியப் பசங்கன்னு சொல்லியும், மீறி அவனுக்கு திருமணம் முடிச்சிக் கொடுத்தா இந்த வரதட்சிணையையொட்டி பின்னாலே ஏதும் வாக்கு வாதம் வந்து அவன் (ஸ்டவ் வெடிச்சி) போர கார்லேயோ, இல்ல ட்ரெயின்ல இருந்து தள்ளிவிட்டா அதனைப் பற்றி பெருசாப் பேச இன்னிக்கு என்ன இருக்கிறது? அவனோ ஒரு வியாபாரி அவன் எப்படி நடந்து கொள்வான்... அப்படியே, அவன் குணத்தை காட்டியிருப்பான்... புரியுதா நான் சொல்ல வராது? :))

குற்றத்தை நம்ம பக்கம் வைச்சிக்கிட்டு, அடுத்தவன திட்டீனா...

Thekkikattan|தெகா said...

At 3:27 AM, Sridhar Narayanan said…

//அவனோ ஒரு வியாபாரி அவன் எப்படி நடந்து கொள்வான்... அப்படியே அவன் குணத்தை காட்டியிருப்பான்... புரியுதா நான் சொல்ல வராது? :))
//

தெகி! You are missing the point. காசை கொடுத்து மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தின் 'நல்ல செயல்பாட்டை' வாங்குவது பெண் வீட்டார். பெண் புகுந்து வாழப் போகும் வீடுஅல்லவா?

பிரச்னை என்று வந்தால் பாதிக்கபடுவதும் பெண் வீட்டார்தான்.

'அவன் குணத்தை காட்டியிருப்பான்' என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி ஒரு மோசமான குணத்தை மறைக்கத்தானே பணமும் நகையும் வாங்கறாங்க. அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?

Thekkikattan|தெகா said...

At 6:49 AM, வவ்வால் said…

தெகா,

//குற்றத்தை நம்ம பக்கம் வைச்சிக்கிட்டு, அடுத்தவன திட்டீனா...//

சரிதான், குற்றம் செய்வது , உடந்தையாக இருப்பது இரண்டும் குற்றமே, பெண் வீட்டார் செய்வது உடந்தையாக இருத்தல்.

காரணம் என்ன?....

ஏன் அப்படி என்று பார்த்தால், அது தவிற்க முடியாதது. சமூகத்தில் செலவு செய்யாமல் ஒரு பெண்ணைக்கட்டிக்கொடுப்பது என்பது குதிரைக்கொம்பு. இன்னும் வரதட்சணைக்கொடுக்க முடியாமல் திருமணம் நடக்காமல் முதிர்க்கன்னியாக ஏதேனும் கார்மெண்ட் கம்பெனி, அலுவலகம், கடைகளில் வேலை செய்து காலம் தள்ளும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு தான் இது.

கோவை பக்கங்களில் சின்ன வயசிலேயே பெண்களை வேலைக்கு அழைத்து செல்வார்கள் மில் காரர்கள் , அவர்கள் போடும் ஒப்பந்தம் என்ன தெரியுமா மாங்கல்ய திட்டம் என்றே பெயர் அதுக்கு, 3 -5 வருடம் வேலை சம்பளம் எதுவும் கையில் தர மாட்டார்கள், ஆனால் கல்யாண செலவை ஏற்றுக்கொண்டு செய்வதாக அல்லது அதுக்கு ஏற்ப ஒரு தொகையை கடைசியில் தருவார்கள். சாப்பாடு மட்டும் போட்டு 3-5 வருடங்கள் வேலை வாங்கி கசக்கி பிழிந்து விடுவார்கள்.

இதெல்லாம் ஏன் இன்னும் இங்கே இருக்கு, யாரும் வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்தால் இதுக்கு தேவையே இருக்காதே.

வரதட்சணை என்பது தவிர்க்க முடியாத தீமையாக இருக்கு.

பல இடங்களிலும் ஒரு பெண் தானே செய்து விடுவோம் என சக்தி மீறி செலவு செய்பவர்களும் இருக்காங்க!

செலவு செய்யாமல் கல்யாணம் ஆகனும் என்று காலம் தள்ளினால் பொண்ணுக்கு செலவு செய்ய யோசிக்கிறான் என்று ஊரில் சொல்வார்கள் என்று செய்பவர்களும் இருக்காங்க.

இப்படிலாம் நடக்காம இருக்கணும்னா அடிப்படையில் சமூகம் மாறனும், நான் மாறிட்டேன் அப்படினு யாரோ ஒருத்தர் அரிதிலும் அரிதாக சொன்னா போறாது.
-----------------------------

ஸ்ரீதர் நாராயணன்,
//அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?//

மாப்பிள்ளை வீட்டாரை நல்லவராக ஆக்க ஆகும் செலவு அது ! அப்படி செலவு செய்தும் பலர் நல்லவராக இல்லாமல் பழைய குருடி கதவை திறடி ஆகிடுறாங்க அதான் பிரச்சினையே!
----------------------------

Thekkikattan|தெகா said...

Sridhar N,

'அவன் குணத்தை காட்டியிருப்பான்' என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படி ஒரு மோசமான குணத்தை மறைக்கத்தானே பணமும் நகையும் வாங்கறாங்க. அதாவது 'நாங்க நாங்களா இருக்காம, நல்லவங்களா இருக்க இவ்வளவு ரேட் கொடுத்திடுங்க'... இதானே ஒப்பந்தம்? நாளைக்கு வியாபார ஒப்பந்தம முறியும்போது நட்டபட்டவன்தானே மல்லு கட்டனும்?//

உங்களது படிக்கும் பொழுது நகைச்சுவையாக இருப்பினும், என்னவோ சொல்லாமல் இரு தரப்பினரும் போட்டுக் கொள்ளும் கூறியபடியான ஒப்பந்தம் போலத்தான் இருக்கிறது :-)).

காலக் கொடுமை... எல்லா இடத்திலும் லஞ்சம், லாவண்யம் அது உறவுகளை நிறுபித்துக் கொள்ளக் கூடவா, பொருமாளே!! :D.

வவ்ஸ்,

நீங்கள் கூறுவதனைப் படிக்கும் பொழுது எத்தனைப் பேருக்கு எவ்வளவு உண்மைகள் தன்னைச் சுற்றி கிடப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த திருப்பூர் விசயங்கள் எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இதற்கு ஒரே வழி இந்த பாலின ரோஷியோ 3:1; அதாவது, மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலமை வந்தால் :-)) கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்...

Thekkikattan|தெகா said...

At 11:38 PM, வவ்வால் said…

தெகா,

நாளு பேருக்கு தெரியும் வண்ணம் எடுத்தாண்டிருப்பதில் பொருத்தருள என்ன இருக்கு. தாராளமாக செய்யுங்கள்.

//இதற்கு ஒரே வழி இந்த பாலின ரோஷியோ 3:1; அதாவது, மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற நிலமை வந்தால் :-)) //

விபரீதமா இருக்கும் போல , ஏற்கனவே அதிகம் இருந்த , இருக்கும் பெண் சிசுக்கொலையின் விளைவு இப்படித்தான் கொண்டு வந்திருக்கும், அரசு நடவடிக்கையால் மட்டுப்பட்டுள்ளது.மீண்டும் கருத்தம்மா கதைக்கு உயிர் கொடுக்க சொல்கிறீர்களா?

தானாக அப்படி 3:1 மாறாது. இப்படி செய்தாக வேண்டும். அது தவறு ஆச்சே.

எவ்வளவுப்படித்த, சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும் அவளை கணவன் தான் வைத்துக்காப்பாற்ற போகிறான் என்ற எண்ணமே திருமணத்தின் போது செலவு செய்ய வைக்கிறது, அந்த எண்ணம் மாற வேண்டும்.உண்மையில் கணவனை விட அதிகம் படித்த , வேலை செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வரதட்சணை கொடுக்க யார் வருவார்கள்.

Thekkikattan|தெகா said...

Thekkikattan|தெகா said...

ஆடுமாடு,

பாருங்கள், நீங்கள் ஒரு உதாரணம் பெயரில் என்ன இருக்கிறது என்பதற்கு (மனிதன் மனிதனாக சிந்தித்து வாழ்வதற்கென்று). பெயரில் நீங்கள் ஒரு மந்தை என உங்களை விளித்துக் கொண்டாலும் அதற்கு எதிர் மறையாக நீங்க மந்தையிலிருந்து விலகியே இருக்கிறீர்கள் என்பதனை இந்த பின்னூட்டத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறீர்கள். உங்களின் மன உறுதிக்கும், தெளிவுக்கும் வாழ்த்துக்கள்!

இங்கு தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க, இங்கே ஒருமித்த எண்ணவோட்டங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் :-).

Friday, September 14, 2007

Related Posts with Thumbnails