Friday, October 19, 2012

மலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure!

பரிணாமம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பூட்டும் நந்தவனம். அது விசயங்களை குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டவென மறைத்து வைத்திருக்கும் சாக்லேட் பார்களை போலவே பல வாழ்க்கை சூத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறது. அவதானிக்கும் தருணம் தோறும் என்னுடைய அனுபவ எல்லைக்களுக்கு ஏற்ப பெரிய சிறகுகளைப் சிறுகச் சிறுக கொடுத்து விரிவடைய வைத்துக் கொண்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மலர்களின் அமைப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தேன். மலர்களின் இதழ்களை கடந்து சென்ற எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது அப்பொழுது விளங்கவில்லை. சற்று மென்மேலும் தவழ்ந்து அறிந்து கொண்டிருக்கும் பொழுது, மலர்களின் உள்ளே நடு நயமாக பெரிய வயிற்றுடன் அமைந்துப்பட்டிருந்த பெண் இனப்பெருக்க உறுப்பான சூல்வித்தினைச் (carpel) சுற்றிலும் அரண்களாக எழுந்து அழகூட்டிக் கொண்டிருந்த ஆண் இனப்பெருக்க உறுப்பான பல ஸ்டெமென்களை (stamen) பார்க்கும் பொழுது என்னுடைய சிந்தனை சிறகு நின்று நிதானித்து விரியத் தொடங்கியது.

இந்த அமைப்பிற்கும் மனித ஆண்/பெண் தேடல் சார்ந்த ஈர்ப்பிற்கும், மரபணு கொண்டு சேர்ப்பிற்கான பரிணாம விளையாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமா என்று சிந்திக்க தோன்றியது. அதன் விளைவு இந்த பதிவு. என்னுடைய கோணங்கி சிந்தனை எப்படியாக இந்த மலரின் இனப்பெருக்க தேர்ந்தாய்வை நம்முடன் தொடர்பு படுத்திக் கொண்டது என்பதற்கு முன்பாக முதலில் ஒரு மலரின் அமைப்பிற்குள் சென்று வந்துவிடுவோம்.

நம்மால் மலர்களே இல்லாத ஒரு உலகையோ அல்லது சினிமாப் பாடல்களையோ நினைத்தும் பார்க்க முடியுமா? அந்த உலகுதான் எத்தனை நிறமிழந்து, வாழ்க்கையற்று சாம்பல் நிறமாக இருக்கும். மலர்கள் அழகிற்கெல்லாம் அழகு சேர்க்கும் ஒரு ரோஜா வனம். கண்களுக்கு முன்னால் அலைகள் வடிவில் விரிந்து கிடக்கும் மலைகளின் சரிவிலும், எழுச்சியிலும் வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்தால் மனம் ஒரு செளந்தர்யத்தின் ஒரு வண்டாக எழுந்து அத்தனை மலர்களையும் ஒரு பறவை பார்வையில் பார்க்க சிடுசிடுத்துக் கொண்டிருக்கும். அத்தனை அழகூட்டு சிரிப்பினை உள்ளடக்கியது அந்தப் பூக்கூட்டம்.

பூக்கும் தாவரங்களில் (angiosperms) உள்ள ஒரு பூவின் பரிணாம வடிவமைப்பை பார்த்துவிடலாமா இப்பொழுது. ஒரு பூக்காம்பு ஒரு மொட்டை யாருக்கோ தான் பரிசளிக்கவிருக்கும் பெட்டியினை சுமந்து நிற்பதாக தன்னுடைய புல்லிவட்ட புற இதழ்களைக் (sepal) கொண்டு உள்ளே இருக்கும் பரிசினை பாதுக்காக்கிறது. இது சற்று தடிமனான இலைகளைப் போல் தோன்றும், அதன் முக்கிய பயன் மலர்வதற்கு முன்னாக அந்த மலரை பொத்தி பாதுகாப்பளிப்பது.

இப்பொழுது அந்த மொட்டு மெல்ல அவிழ்கிறது. வண்ணம் வெடிக்கிறது. புறவயமாக இந்த பூமிக்கு அழகூட்டும் அல்லிவட்டம் (petal) மலர்களின் இனங்களுக்கு தகுந்தாற் போல பல நிறங்களைக் கொண்டு விரிவடைகிறது. ஒவ்வொரு மலரும் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உள்ளடக்கியே எழுந்து நிற்கிறது.

ஒரு மலருக்குள் ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியிருந்தால் அதனை ஒரு முழு பூவாகவும், அப்படி அன்றி பெண் இனப்பெருக்க விசயங்கள் ஒரு பூவிலும், ஆண் விசயங்கள் மற்றொரு பூவிலும் அமைந்திருந்தால் அது முழுமையற்ற பூவாகவும் கருதிக் கொள்வோம்.

எப்படியாகினும் இவைகளை இணைத்து வைப்பது என்னவோ புறக்காரணிதான் என்பதனை ஞாபகத்தில் நிறுத்திக் கொள்வோம் (அது காற்றாகவோ, நீராகவோ, பூச்சி/பறவை இத்தியாதி விசயங்களாகத் தானிருக்கும்).


பெண் இனப்பெருக்க பாகங்கள்:

இப்பொழுது அல்லிவட்டத்தை (petal) தொடாமல் உள்ளே பார்வையை செலுத்தினால் நடுநயமாக பூக்களுக்கான ராணியைப் போல ஒரு தண்டு நின்று கொண்டிருக்கும். சற்றே ஒரு பேரிளம் பெண்ணை ஒற்ற தசைப் பிடிப்புடன். அந்த ராணியின் பெயர் சூல்வித்திலை (carpel). இந்த ராணி மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஒரு வீணையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அந்த வீணையை தூக்கி நிறுத்தினால் அதன் குடுவை அமைப்பு கீழ் நோக்கி இருக்கும், அல்லவா?

அந்த வீணை அமைப்பின் முகப்பில் சூலகமுடி (stigma) இருக்கிறது. அதன் கீழாக நீண்டு ஓடும் வீணையின் கழுத்துப்பகுதிக்கு பெயர் சூலகத்தண்டு (style). இவைகள் இரண்டையும் உள்வாங்கியபடி இருக்கும் வீணையின் குடுவைப்பகுதியினை சூலகம் (ovary) எனக் கொள்க. அதனை ஊடுருவி பார்த்தால் அதனுள் பொதிக்கப்பற்றிருக்கிறது, பெண் சூல் முட்டை (ovule).

ஆண் பகுதி:

இப்பொழுது அந்த ராணியைச் சுற்றியும் நிறைய கலங்கரை விளக்கங்களைப் போல எழுந்து நிற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. அந்த ராணியை சுற்றிலும் அண்ணார்ந்து பார்த்தபடியோ, அல்லது குனிந்து பார்த்த படியோ மிக அருகாமையில் நின்று கவரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மொத்த கலங்கரை விளக்கத்தினை Stamen என்று கொள்வோம்.

இது இரண்டு பகுதிகளாக உள்ளது. நீண்ட தண்டு (மகரந்த கம்பி-filament) அதன் நுனியில் பல மகரந்ததூள்களை கொண்ட மகரந்த பை (anther). இங்கிருந்தே மகரந்த தூள்கள் புறக்காரணிகளைக் கொண்டு பெண்ணின் பிசுபிசுப்புடன் அமைந்துப்பட்டிருக்கிற சூலகமுடிகளுக்கு ஆணின் மகரந்த தூள்களை கொண்டு சேர்க்கின்றன.

மெதுவாக அந்த மகரந்தத் தூள், சூலகத்தண்டின் வழியாக சில வேதிய மாற்றங்களைப் பெற்றபடியே சூலகத்திற்கு சென்றடைகிறது. அங்கே தனக்காக காத்திருக்கும் சூல் முட்டையுடன் பற்றிப்படறி, இரண்டற கலந்து அடுத்த தலைமுறையை மரபணு பரிவர்த்தனை மூலமாக சாதித்துக் கொள்கிறது. சூல்கொண்டவுடன், அந்த வீணையின் புற அமைப்பு அதாவது சூலகம் நாம் உண்ணும் பழப்பகுதியாகவும், உள்ளமைப்பு விதையாகவும் ஆகிவிடுகிறது.

இப்பொழுது நாம் முழுமையாக ஒரு மலரின் அமைப்பினையும் அது எப்படி சூல் கொள்கிறது என்றும் பார்த்தாகிவிட்டது.

இதில் புதிதாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை இங்கு வைத்து தைத்து விடுகிறேன். இயற்கையமைவில் பார்த்தால் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே போல அமைந்து விடுவது கிடையாது. இயற்கையின் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் ஆண் போராடியே தனது மரபணு சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கட்டாயத்தில் வைக்கப்படுவதாக அறிய முடிகிறது.

அதற்கு உதாரணமாக அனைத்து உயிரினங்களின் ஆண்/பெண் புறத் தோற்றத்திற்கென அமைந்த வண்ண வண்ண ஜிகர்தண்டா வேலைகளை வைத்துப் பார்த்தாலே தெரியும். இதனில் குறிப்பாக பறவைகளில் ஆண் சற்றே தூக்கலான நிறங்களையும், குரல் வளத்தையும் பெற்று தனக்கு போட்டியான மற்றொரு ஆண் பறவையிலிருந்து பெண்ணின் பார்வையை தன்னிடத்தே கவர்ந்து வெற்றி கொள்ளும் கட்டாயத்திலிருக்கிறது.

போலவே, விலங்குகளில் எது அதிகமான போராட்டத் திறனையும், உடல் வலிமையையும் பெற்றிருக்கிறதோ அது அதிகப்படியான பெண்களை பெற்றுக் கொள்கிறது. இதனில் கூர்ந்து கவனித்தால் அது மலர்களிளாகட்டும், விலங்குகளிளாகட்டும் பெண் நடுநயமாக நின்று தன்னுடைய சுட்டு விரல் அசைப்பில் தனக்கு எது போன்ற திறனைக் கொண்ட, வலிமை மிக்க வாரிசை அடைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கும் பீடத்தில் அமர்ந்திருப்பதாக இருக்கும்.

என்னுடைய சிந்தனை இந்த அடிப்படையின் புரிதலோடு இந்த மலர்களின் இனப்பெருக்க அமைப்பை காண தலைப்பட்டது. எப்படியெனில், ஒரே ஒரு சூல்வித்திலை சுற்றிலும் ஏன் அத்தனை ஆண் இனப்பெருக்க ஸ்டேமெனை நிறுத்தி வைத்திருக்கிறது? இது இனவிருத்தி செய்யும் வாய்ப்பை அதிகரிக்கவே அப்படியான ஓர் இயற்கையமைவு என்றாலும், எப்படி ஆஃப்ரிகா சமவெளிகளில் இன்றளவும் விலங்குகளிடத்தில் போட்டியின் அடிப்படையில் இயற்கை தேர்ந்தெடுப்பு நடைபெறுகிறதோ அதனே இந்த ஒரு மலர் உலகத்திலும் நடைபெறுகிறது.

இங்கே ஒரு திருகல், ஒரு சூல்வித்திலையை சுற்றிலும் நிற்கும் அந்த ஸ்டெமென்களை பார்க்கும் பொழுது, நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது :) ... இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.

அதனால் பூக்களே எங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் :)


15 comments:

Anna said...

பூக்களின் இனப்பெருக்கத் தொகுதியை மிக நன்றாக விவரித்திருக்கிறீர்கள். Amazing!

இரு ச‌ந்தேக‌ங்க‌ள்:
1.ஒரே பூவிலுள்ள மகரந்த மணிகளால் அநேகமாக அதே பூவிலுள்ள சூலகமுடிகளுக்குள் போகாதல்லவா? Wouldn't it be inbreeding then? அநேகமாக அதே இனத்தைச் சேர்ந்த வேறொரு பூவிற்கு இந்த மகரந்த மணிகளைக் கொண்டு சேர்ப்பதற்குத் தானே புறக்காரணிகளின் உதவி தேவை?

2. "நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான"
ம்ம்ம். இந்த‌த் திரும்ப‌ல்க‌ள் வ‌கைக‌ளில் எதையெல்லாம் சேர்க்கிறீர்க‌ள்? I might be reading too much into this. But quite a few thoughts are brewing in my mind after reading this sentence. I am bit too tired to put it into words now. :) உங்க‌ள் ப‌திலைப் ப‌திலைப் பார்த்துவிட்டு hopefully நாளைக்கு அவற்றைப் பற்றிச் சொல்ல முயற்சிக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

அன்னா, வணக்கம்.

இரண்டாவது கேள்வியை விட முதல் கேள்விக்கு பதில் சொல்லுவது ரொம்ப எளிமை, இருந்தாலும் என்னுடைய கருதுகோளின் அடிப்படையில் இரண்டிற்கும் அடித்து பார்த்துக் கொள்வோம்.

1) தாவர இனங்களில் இரண்டு வகைகளில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று இனப்பெருக்கம் நடந்தேருகிறது. தன் மகரந்தச் சேர்க்கை (self pollinating) மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை (cross pollination). இதனில் முதல் வகையான மகரந்தச் சேர்க்கை அத்தனை பிரபலமில்லை தாவர இனங்களிக்கிடையே! இது அயல் மகரந்தச் சேர்க்கைக்கு வாய்ப்பற்ற நிலையில் நடந்தேறும் ஒரு தப்பிப்பிழைப்பதற்கான யுக்தி. ஆனால், லாஜிக்கலாக பார்க்கும் பொழுது ஒரு முழுமையான மலருக்குள் நுழையும் புற மகரந்தச் சேர்க்கை காரணிகளான சிறு பூச்சி இனங்கள் சற்றே அலங்கோல அவசரத்தில் தாவித் திரியும் பொழுது அதே மலருக்குள் அமைந்த பெண் சூலகமுடிக்குள் மகரந்த தூள்களை ஒட்டி விடும் அபாயமிருக்கிறதுதானே?

இருந்தாலும் நீங்க குறிப்பிட்ட அந்த சுய இனப்பெருக்கத்தில் (inbreeding) சூழலியத்திற்கு இயைந்து தப்பி பிழைப்பதற்கு உகந்த மரபணு வேற்றுமைகள் கிடைக்காமல் அழிந்து பட்டு போவதற்கு பெரிய வாய்ப்புகள் இருப்பதால், நான் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு எனது ஓட்டை அளிக்கிறேன். :)

அடுத்து பின்னூட்டத்தில் இரண்டாவது கேள்விக்கு பதில் வந்துகொண்டிருக்கிறது...

Thekkikattan|தெகா said...

2) இயற்கை உலகினுள் நமக்கேயான சமூகக் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளே ஒரு நடை சென்றோமானால், அங்கே எவ்வாறாக இந்த பாலினத் தேர்வு நடை பெறுகிறது என்று அவதானிக்கும் தருவாயில் எனக்கு விளங்க வருவது, ஆண் பாலினத்திற்கிடையே ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருப்பதாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

குரங்குகள் கூட்டத்தில் ஏழிலிருந்து 25 நபர்கள் இருக்கும் ஓர் இடத்தில் அங்கே ஒரே ஒரு ஆல்ஃபா ஆண் குரங்கே தன்னுடைய மரபணு சார்ந்த விதையை தூவ வேண்டுமென்று, தன்னைச் சுற்றிலும் நிறைய வயதுக்கு வந்த பெண் குரங்குகளையும், தன்னை விட வயதில் குறைந்த இள ஆண் குரங்குளையும் (sub adults)வைத்திருக்கிறது. அந்த அமைப்பு ஒரு கட்டுக்குள் இருக்க எப்பொழுதும் அந்த ஆல்ஃபா குரங்கு பார்த்துக் கொள்கிறது.

இருப்பினும், அந்த கூட்டத்திலிருந்து பெண் குரங்குளை பிரித்தெடுத்து பிரிதொரு கூட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ள அண்டைய வீட்டு ஆல்ஃபா குரங்கு போட்டியிடாமலும் இல்லை, அதற்கான சமர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தமைவை அப்படியே நமது பக்கம் திருப்பினால், ”இந்த கழுத்து திரும்பலுக்கான” முயற்சிகள் ஒரு மிருக பார்வையிலிருந்தே புரிந்து கொள்ளக் கூடியாத உள்ளதுதானே! முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இறுதித் தேர்வு என்னவோ பெண்களின் சுட்டுதலிலே அமைந்து பட்டு இருக்கிறது. What I am trying to do is here, simply placing my hypothetical obervation that I bring my field experience into human(male) basic instinctual expression; in an evlotionary perspective.

ஆனால், சிந்தித்து செயல்களில் இறங்குவது பல சமூக கட்டுப்பாடுகளின் நிலைக்கு நம் இனம் நகர்ந்திருப்பதால் அது போன்ற விலங்கு சார்ந்த செயல்பாடுகள், மட்டுப்படுத்தப்பட்டு நாம் ஒரு ஒழுங்கமைவில் வாழ்வதால், என்னுடைய கருதுகோள் உடனடியாக மறுக்கப்படலாம்; because we are human living in a very organised social environment where the expression of natural selection is at its denial phase :)

ஜோதிஜி said...

அக்கறைக்கு நன்றி. எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை. ரசித்து படித்தேன். இந்த பகுதியை தாவர்த்தின் ஒவ்வொரு நிலையை படிப்படியாக அப்படியே உங்கள் எழுத்தில் கொண்டு வர வேண்டும்.

இந்த பதிவில் ஒரே ஒரு குறை. போன பதிவில் உள்ளது மாதிரி ஒரு யூ டியூப் படமாக போட்டு இருக்கலாம். கீரிடத்தில் ஒரு கல் குறைகின்றது.

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

The Analyst said...

இயற்கையில் எத்தனையோ வேறுவிதமான வகையில் இந்தப் பாலினத்தேர்வு நடைபெறுகின்றது. குரங்கினங்களுக்கிடையே கூட எத்தனையோ வித்தியாசங்கள் உண்டல்லவா? அநேகமாக பெண் விலங்கே பிள்ளை வளர்ப்பில் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடும் விலங்கினங்களில் இந்த ஆண்-ஆண் போட்டி கூடியளவில் உண்டெனலாமா? அங்கும் பெண்ணின் தெரிவு என்று எப்போதும் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன். நீங்காள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், அது ஓருங்குட்டான் குரங்குகளுக்கும் கொரில்லாக்களுக்கும் மிகவும் பொருந்தும். இவ்விரு விலங்கினங்களிலும் பெண்ணுடனான பாலியல் வன்புணர்வு அதிகளவு நடக்கும். பெண்ணின் தேர்வென்றில்லாமல் எதோ பிள்ளை பெறுவதற்காக வேறு வழியின்றி தன் பிள்ளைகளைக் கொன்ற வேறொரு கூட்டத்தைச் சேர்ந்த ஆண் குரங்குகளோடு செல்வதே நடக்கிறது.

எமது நெருங்கிய உறவுகளான chimps களிலும் bonobos களிலும் ஆண்/பெண்ணிற்கிடையிலான உறவு மேற்சொன்னவற்றிலும் விட முற்றிலும் மாறனதுடன் complex ஆனதாகவும் படுகிறது. Chimps ஒரு ஆணாதிக்கக் கட்டமைப்பிலும் Bonobos ஒரு பெண்ணாதிக்கக் கட்டமைப்பிலும் வாழ்கின்றன. But their sexual relationship with each other within a group is very complex. Greg Laden Explains it really nicely,
 
So, given the chimp model, we should all be bisexual and disregard age of our sexual partners. Almost all baby making sex should involve a gang bang lasting several days. We should have strong male hierarchies and female hierarchies that determine, ultimately, who gets to be the father of each child (more or less) not by who has sex with whom, but by regulating exactly when in the ovulatory cycle intromissive sex with male orgasm happens. If we lean towards the common chimp model, all males should be dominant over all females. If we lean towards the bonobo model, all females should be dominant over all males.
 
From here: http://scienceblogs.com/gregladen/2008/12/31/the-natural-basis-for-gender-i/

 
 
Contd..2

The Analyst said...

நான் மேற்சொன்னவையெல்லாம் என்னையும் விட உங்களுக்குக் கூடத்தெரிந்திருக்கும். நீங்கள் அந்தத்துறையில் இருப்பதால். எனக்கு விளங்கியதையே சொல்ல முயன்றுள்ளேன். பிழையெனில் சொல்லுங்கோ. I am not even sure whether this is even related to what I am trying to say (let's just blame it on my really tired brain shall we?).

அத்தோடு ஓரின‌ச் சேர்க்கையை எப்ப‌டி விளக்குவ‌து?
எமது பழக்கவழக்கங்களுக்கு தனிய பரிணாமமோ உயிரியலோ மட்டுமே பொறுப்பல்லத் தானே. biological determination is a fallacy. எமது பழக்க வழக்கங்களை அவ்வளவு சுலபமாக விளக்கிவிட முடியாது. அதை செதுக்கும் காரணிகள் பல. மேற்சொன்ன கட்டுரையை வாசித்தால் அதில் எமது பாலின உறவுகள் பறவைகளினதை ஒத்திருக்கிறதென விளக்குவார். நாம் சமூக விலங்குகள் அத்தோடு மற்றைய எல்லா விலங்குகளை விட மனித இனத்திலேயே மிகக் கூடிய பிள்ளைப் பருவம் உண்டு. நமது பழக்க வழக்கங்களுக்கு  நாம் வளரும் கலாச்சாரம் மிக முக்கிய பங்களிக்கிறது. It's nature and nurture.

அதனால் "நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது " இந்த வசனத்திற்கு நான் சொல்தென்னவென்றால்,
ஆண்களின் பிழையல்ல பரிணாமத்தின் விளைவென்று பரிணாமத்தை ஏற்றுக் கொள்வோரும் ஆண்களின் குணம் அப்படித்தான் என்று மற்றவர்களும் கூறி அதனால் பெண்க‌ளைக் க‌ட்டுப்ப‌டுத்துவ‌து ம‌ட்டும‌ன்றி பெண்க‌ளுக்கெதிராக‌ச் செய்யும் அநேக‌மான‌ குற்ற‌ங்களுக்குப் பெண்க‌ளையே கார‌ண‌மாக்குவதும் இன்னும் தொட‌ர்ந்து கொண்டே இருக்கிற‌து.

என‌க்கு ந‌ன்றாக‌ விள‌ங்குது நீங்க‌ள் அப்ப‌டி நினைத்து எழுதவேயில்லை என்று. ஆனால் நீங்க‌ள் இந்த‌க் கோண‌த்தில் இதைப் ப‌ற்றிச் சிந்தித்தீர்க‌ளா தெரிய‌வில்லை. ஒரு பெண்ணின் நிலையில்‌ "ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல்" என்ற‌ மனப்பான்மையின் விளைவை ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆயிரம் பெண்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர்.  Men are not just robots, produced of evolution. Culture shapes them significantly.
In addition, இந்த‌த் த‌லை திரும்ப‌ல்க‌ள் சும்மா almost innocent க‌வ‌ர்ச்சி என்றால் ப‌ர‌வாயில்லை (not sure). But the sexual objectification of women is unacceptable. கலாச்சாரம் பெண்களின் பாலியலைக் காலம் காலமாக‌ ஒடுக்காமல் விட்டிருப்பின் ஆண்களைக் கண்டதும் பெண்களுக்குக் கூட இந்தத் தலை திருப்பல்கள் இயல்பாக வந்திருக்கும் என‌ நினைக்கிறீர்க‌ளா?

நான் சொல்ல‌ வ‌ந்த‌தைத் தெளிவாக‌ச் சொன்னேனா தெரிய‌வில்லை. Like I said  I might have read too much into it. ஆனால் இந்த ஆதிக்கத்தால் அநேக‌மான‌ பாதிக்க‌ப்ப‌ட்டவர்கள் அடங்கிய‌‌ கூட்ட‌த்திலிருக்கும்/பாதிக்க‌ப்ப‌ட்ட‌ அனுப‌வம் உள்ள‌வ‌ளாக‌ இந்த‌ எண்ண‌ங்க‌ள் வ‌ருவ‌தைத் த‌விர்க்க‌ முடிவ‌தில்லை.

Anonymous said...

//In addition, இந்த‌த் த‌லை திரும்ப‌ல்க‌ள் சும்மா almost innocent க‌வ‌ர்ச்சி என்றால் ப‌ர‌வாயில்லை (not sure).//

I think thats what he meant! Male sightu addiching the females :-)

//கலாச்சாரம் பெண்களின் பாலியலைக் காலம் காலமாக‌ ஒடுக்காமல் விட்டிருப்பின் ஆண்களைக் கண்டதும் பெண்களுக்குக் கூட இந்தத் தலை திருப்பல்கள் இயல்பாக வந்திருக்கும் என‌ நினைக்கிறீர்க‌ளா?//

That is quiet natural, and we can see that commonly in western culture. Look at the fan count for Justin Bieber :-) I welcome such mutual sight addiching and partner selection.

Thekkikattan|தெகா said...

hahaha... Anony, you got it, part of it.. That's what exactly I am going to come around and defend myself with... That is not going to be palatable to most of our conservative minds though .. however, I am coming ... :)

Anonymous said...

//அதனால் பூக்களே எங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் :)//

முழுக் கட்டுரையிலும் நீட்டி முழக்கிச் சொல்லப்பட்டது, பூவுக்குள் ஆண் குறியும் உண்டு பெண் குறியும் உண்டு என்று. ஆகவே இனி பூக்களே என்று பெண்களை மட்டும் குறிப்பிடலாகாது. வேண்டுமென்றால், ஆண் பூக்களே பெண் பூக்களே என்று தனித்தனியாக விளித்துக் கொள்ளலாம்.

// இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.//

அதைத்தான் இந்நாளைய பெண் பூக்களும் கட்டழகு கொண்ட ஆண் பூக்களை நோக்கிச் செய்கிறார்கள். எனவே அதுவும் பரிணாமத்தின் விளைவே.

நிற்க. பூவுக்கும் மனிதத் துணை தேர்வுக்குமான உங்களது ஒப்பீடு மொக்கையாக இருக்கிறது. பூவில் ஆண் குறி பெண் குறி இரண்டும் இருந்தாலும், சேர்க்கை நடைபெறுவது முழுக்க புறக் காரணிகளால் தான். எனவே ஆண் குறிகள் என்னைப் பார் என்னைப் பார் என்று எவ்வளவு தான் விறைத்துக் கொண்டு நின்றாலும் அதே பூவுக்குள் சேர்க்கை நடப்பது எல்லாம் தற்செயலாக நடைபெறுவதே. ஆகவே பெண்ணின் தேர்வு என்று பூவுக்குள் எதுவும் கிடையாது.

மனித இனத்தில் ஆண் மட்டும் பெண்ணைத் துரத்துவது என்பதெல்லாம் இன்று மாறி வருகிறது. சேவல் நல்ல கட்டை என்றால் கோழிகள் அதை நோக்கிப் பாய்கின்றன.

அனலிஸ்ட் கூறியதைப் போல, இயற்கையில் பலவிதத் துணை தேர்வுகள் நடக்கின்றன. யானைகளில் தாய் வழிச் சமூகங்களும் இன்று உண்டு. தனது ஆண் துணை கட்டிய கூட்டுக்குள் வேறொரு ஆண் பறவையுடனும் புணர்ந்து உருவாக்கிய முட்டைகளைப் போடும் கள்ளப் பெண் பறவைகளும் உண்டு. எனவே, தனக்குச் சாதகமான ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு தமது நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொள்ளும் ஆண் முயற்சியாகவே இதைக் காண்கிறேன்.

எனவே கலாச்சார ஒடுக்குதல்கள் இல்லாவிட்டால் பாய்தல் இரு பக்கங்களிருந்தும் நடக்கும். என்ன, ஆண் மாதம் முழுதும் பாய்வான், பெண் மாதத்தில் ஹார்மோன் அலையடிப்பின் போது மட்டும் பாய்வாள்.

Anonymous said...

// If we lean towards the bonobo model, all females should be dominant over all males.//

பெண் ஆதிக்க போனோபோஸ் சமூகங்கள் ஆணாதிக்க சிம்ப் சமூகங்களை விட மிகவும் வன்முறை குறைந்தவை என்பது இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம். எனவே இயற்கையின் பரிணாமத்தின் கூற்றுப்படி இப்பூவுலகில் அமைதி நிலவ பெண்களே ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட வேண்டும் என்று இந்தக் கட்டுரைக்கு நிகரான வக்காலத்துக் கட்டுரை ஒன்றை எழுத முடியும்.

Thekkikattan|தெகா said...

அன்னா அண்ட் அனானி எண் 2 - இரண்டு பேருக்கும் பொதுவானதாக இந்த பின்னூட்டங்களை வைத்துக் கொள்வோம் - இந்த கட்டுரை சொல்ல வந்த முக்கிய கருத்து எப்படியாக இருக்கிறது என்றால், ஒரு வலிமைமிக்க மரபணுவைக் கொண்ட தலைமுறையை விட்டுவிட்டு செல்வதானால் அதற்கு பெண் இனத்தின் பங்களிப்பு மிக முக்கிய இடத்தை பெறுகிறது என்றே கூற வருகிறேன்.

அதனையொட்டியே ஆண் போராடி அந்த இடத்தை அடைய முடிகிறது; சில வாலில்லா குரங்குகளின் இனத்தைத் தாண்டி. அதனில் மனித இனமும் அடக்கம்.

ஏனெனில் பல தார மணம் (polygamous) என்பது எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட சமூகத்திலும் விரும்பி அங்கீகரிக்கப்படுவதில்லை.அதனைத் தாண்டியும் பெறும் குழந்தைகளுக்கும், விரிவடைந்த குடும்பத்திற்கும் பொருளாதார (உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு - parental care) தேவைகளை சந்திப்பதிலும் பிரச்சினை வருகிறது என்பதும் இதனை காலப் போக்கில், இப்பொழுது இருப்பதனைப் போன்று சில விலங்கினங்களில் இந்த ஜோடி அமைப்பு முறை வழக்கத்திற்கு வந்திருக்கக் கூடும்.

மேலும் இந்த ஜோடி அமைப்பு முறையில் (monogamous) ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் கிடைத்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயத்தில் பல தார மணத்தில் வலிமை உள்ளதே பல பெண்களை கவர்ந்து வைத்து கொள்ளும் வாய்ப்பு அதிகமிருப்பதால், அப்படி இப்படியாக இருக்கக் கூடிய ஆண்கள் ஏக்கத்திலேயே காலத்தை கடத்தி மாண்டழிவதற்கு வழி வகுத்து விடும்.

இன்னும் சில பின்னூட்டங்களில் எப்படி female species play a vital role in sexual selection என்று கூற முயற்சிக்கிறேன். அதுக்குள்ளும் வண்டியை ஓட்டி அடிச்சு கொன்னுறாதீங்க :)

Thekkikattan|தெகா said...


// பூவில் ஆண் குறி பெண் குறி இரண்டும் இருந்தாலும், சேர்க்கை நடைபெறுவது முழுக்க புறக் காரணிகளால் தான். எனவே ஆண் குறிகள் என்னைப் பார் என்னைப் பார் என்று எவ்வளவு தான் விறைத்துக் கொண்டு நின்றாலும் அதே பூவுக்குள் சேர்க்கை நடப்பது எல்லாம் தற்செயலாக நடைபெறுவதே. //

இங்கே நான் கவனிக்க கூறிய விசயம், ஏன் பல ஸ்டேமென் இருக்கிறது, ஆனால் ஒரே ஒரு கார்பெல் மட்டும் நடுநயமாக இருக்கிறது. ஏன் இப்படி பல ஸ்டெமென்களை அமைத்து வைத்திருக்க வேண்டும் எதனை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள? அப்படியெனில் இனப்பெருக்க வெற்றியை தீர்மானிப்பது யார்?

//மனித இனத்தில் ஆண் மட்டும் பெண்ணைத் துரத்துவது என்பதெல்லாம் இன்று மாறி வருகிறது.//

இதனை நான் ஒன்றும் மறுத்து எங்கும் இந்த கட்டுரையில் எழுதிய மாதிரி இல்லையே. இதற்கு முன்னாடி பின்னூட்டங்களில் இப்படியாக கூறியிருந்தேன், அது சுட்டி நிற்கும் விசயம் கிட்டத்தட்ட உங்களோட கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கும். அந்த பின்னூட்டத்தின் ஒரு பகுதி...

சிந்தித்து செயல்களில் இறங்குவது பல சமூக கட்டுப்பாடுகளின் நிலைக்கு நம் இனம் நகர்ந்திருப்பதால் அது போன்ற விலங்கு சார்ந்த செயல்பாடுகள், மட்டுப்படுத்தப்பட்டு நாம் ஒரு ஒழுங்கமைவில் வாழ்வதால், என்னுடைய கருதுகோள் உடனடியாக மறுக்கப்படலாம்; because we are human living in a very organised social environment where the expression of natural selection is at its denial phase :)

//தனது ஆண் துணை கட்டிய கூட்டுக்குள் வேறொரு ஆண் பறவையுடனும் புணர்ந்து உருவாக்கிய முட்டைகளைப் போடும் கள்ளப் பெண் பறவைகளும் உண்டு. //

இதனையும் மறுப்பதற்கில்லை, கூட்டமாக வாழும் ஒரு வாழ்வமையில் இருக்கும் வாலில்லா குரங்களில் யார் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதனை எப்படியாக அறிந்து கொள்ள முடியும் அந்த ஆல்ஃபாவல்? நீங்கள் கூறிய பறவைக் கூற்று அங்கும் நடைபெறுவதற்கு அனேக வாய்ப்புகள் உள்ளதுதானே!
// சேவல் நல்ல கட்டை என்றால் கோழிகள் அதை நோக்கிப் பாய்கின்றன.//

இதனை அப்படியே இன்னமும் வேட்டையாடி பிழைக்கும் சமூகத்தில், அங்கே கட்டமைப்பு தளர்த்தப்பட்டு இருப்பதால் வலிமை மிக்க ஆணை தேர்ந்தெடுக்கும் பெண் அமைப்பு இருக்கத்தான் செய்திருக்கிறது. அதற்கு மிதமான பல தார மணம் (mildly polygamous) என்று பெயரிட்டுருக்கிறார்கள்.

மொத்தத்தில் இது நவீன உலகில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு காரணம் - அனலிஸ்ட் கூறிய கலாச்சாரம், சமூக ஒழுங்கீடு, முறைப்படுத்தப்பட்ட வாழ்வமைவு மட்டுமன்றி மனித குழந்தைகள் நீண்ட நெடிய காலங்கள் பெற்றோர்களை நம்பிப் பிழைக்கும் படைப்பும் இந்த நடைமுறையை குறைத்திருக்கலாம்.

யாருடைய மரபணுவையோ சுமந்து நிற்கும் offspringக்கு எப்படி அந்த ஆண் விலங்கு பாதுகாப்பையளித்து அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி வைக்கும், அதுவும் இந்த ஜோடி தார மண வாழ்க்கையை நோக்கி பல சில விலங்குகளை நகர்த்தியிருக்கக் கூடும்.

Thekkikattan|தெகா said...

அன்னா,

//இந்த‌த் த‌லை திரும்ப‌ல்க‌ள் சும்மா almost innocent க‌வ‌ர்ச்சி என்றால் ப‌ர‌வாயில்லை (not sure). But the sexual objectification of women is unacceptable. கலாச்சாரம் பெண்களின் பாலியலைக் காலம் காலமாக‌ ஒடுக்காமல் விட்டிருப்பின் ஆண்களைக் கண்டதும் பெண்களுக்குக் கூட இந்தத் தலை திருப்பல்கள் இயல்பாக வந்திருக்கும் என‌ நினைக்கிறீர்க‌ளா?//

அதுவேதான் நானும் என்னுடைய முதல் இரண்டு பின்னூட்டங்களில் கூற வந்தது. அதனை ஹைலைட் செய்தும் காட்டியிருக்கிறேன். இன்னமும் நம் சமூகம் ஓர் “ஆண்வழிச் சமுகமாகத்தான்” (patriarchical) பரிணமித்து வந்து கொண்டிருக்கிறது. இது இயற்கையின் ஒரு உடல் சார்ந்த கட்டமைப்பில் அமைந்து கொண்டது எனினும், இன்றைய கால கட்டத்தில் இது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கிறது debatable!

//நான் சொல்ல‌ வ‌ந்த‌தைத் தெளிவாக‌ச் சொன்னேனா தெரிய‌வில்லை.//

தெளிவாகத்தான் எடுத்து வைச்சிருக்கீங்க, மிகச் சரியாக புரிந்து கொண்டேன். அதே மாதிரி இந்த கட்டுரையைச் சார்ந்து மேலும் விளக்குவதற்கு ஒரு வாய்ப்பளித்ததிற்கும் ஒரு சிறப்பு நன்றி, அன்னா :).

Anonymous said...

//ஏனெனில் பல தார மணம் (polygamous) என்பது எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட சமூகத்திலும் விரும்பி அங்கீகரிக்கப்படுவதில்லை//

தேனீக்கள் போன்ற முறைபடுத்தப்பட்ட சமூகத்தில் இதுதானே வழமை?

//இங்கே நான் கவனிக்க கூறிய விசயம், ஏன் பல ஸ்டேமென் இருக்கிறது, ஆனால் ஒரே ஒரு கார்பெல் மட்டும் நடுநயமாக இருக்கிறது. ஏன் இப்படி பல ஸ்டெமென்களை அமைத்து வைத்திருக்க வேண்டும் எதனை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள? அப்படியெனில் இனப்பெருக்க வெற்றியை தீர்மானிப்பது யார்?//

ஏனென்றால் கருமுட்டை எங்கு கரு உண்டாகுமோ அங்கேயே இருக்கிறது. ஆண் விந்தணுக்கள் நீந்திச் சென்று கருமுட்டையை அடையும் செயலும் (இங்கு ஸ்டேமேன்கள்) ஆண் பெண் இணை சேர்வதும் ஒன்றாகுமா? உங்களது ஒப்பீடு தான் இங்கு கேள்விக்குள்ளாவது.

//because we are human living in a very organised social environment where the expression of natural selection is at its denial phase :)//

இயற்கையில் இருப்பதை எல்லாம் மனிதச் சமூகம் ஏற்றுக்கொண்டே ஆகணுமா? சாதியமைப்பை (hierarchy) ஏற்றுக்கொள்ளத் தயாரா? அதுவும் இயற்கை தானே? அதுவும் வலிமையான ஜீன்கள் மட்டுமே கடத்தப்படும் natural selection தானே?

//யாருடைய மரபணுவையோ சுமந்து நிற்கும் offspringக்கு எப்படி அந்த ஆண் விலங்கு பாதுகாப்பையளித்து அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி வைக்கும், //

ஆண் தான் பாதுகாப்பளிக்கணும் என்று விதிமுறை எதாவது இருக்கிறதா என்ன? பாலூட்டிகளிலும் தாய்வழிச் சமூகங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றனவே?

கல்வெட்டு said...

ம்ம்.. தெகா மண்டபம் போட்டு பேசப்பட வேண்டிய ஒன்று.

பூக்களில் இருந்து பூவையருக்கு தாண்டிவிடும் சமார்த்தியம் தெகாவிற்கு. நல்ல கட்டுரை தெகா.

அன்னா & தெகா,
இயலபான தலைதிருப்பல் என்பதையும் தாண்டி, எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் மனித இனத்தின் ஒரே நோக்கம் சந்ததி விரிவாக்கம் என்ற புள்ளியில் வந்து நிற்கும். மற்ற எல்லாம் அதைச் சுற்றி அமைவது. தன்பால் உறவு கொள்பவர்களின் ஹார்மோன்கள் செய்த சதி தவிர்த்து.

உயிரியியல் உடல் மனவியலையும் சேர்த்து டாக்டர் ஷாலினி பல கட்டுரை எழுதியுள்ளார். ஆணின் தலை திருப்பல்கள் எல்லாம் இயல்பான ஒன்று என்று சொல்லி இருப்பார்.

வேட்டுவ மூளை!
http://linguamadarasi.blogspot.com/

உடல் அரசியல் என்று ஜமாலன் சொல்வதும் இதுவே

உடல்தேடி அலையும் ஆதாம்களும், ஏவாள்களும்
http://tamilbodypolitics.blogspot.com/2007/11/blog-post_13.html

Related Posts with Thumbnails