Friday, August 28, 2015

மைக்ரோ மனிதர்கள்: Micro by Michael Chrichton

கடைசியாக மைக்கேல் க்ரிக்டனோட புதினம் வாசித்தது ’தி ப்ரே.’ வாசித்த
கையோட வந்தவங்க போனவங்ககிட்டயெல்லாம் "நானோ" தொழிற் நுட்பத்தை எதுக்கெல்லாம் எப்படியா பயன் படுத்த முடியும்னு மூச்சு விடாம பேசியதில் ரெண்டு மூன்று புத்தகங்கள் வாங்க வேண்டியதாப் போச்சு. மைக்கேல் க்ரிக்டன் எப்பொழுதும் புதிய தொழிற் நுட்பங்களை அவ்வளவு எளிமை படுத்தி புரியும்படி வழங்கியிருப்பார்.

அதுக்குப் பிறகு வெளியான அவருடைய இரண்டு புத்தகங்கள் வாங்கி அரைகுறையா வாசித்த வாக்கில் தூங்கிட்டு இருக்கு.  இடையில 2011ல அவர் கடைசியா எழுதின ‘மைக்ரோ’ இப்போதான் என் கண்ணில பட்டு வாங்கி வாசிக்க ஆரம்பிச்சேன். அவருடைய நடையும் இந்த புதினத்தின் கருவும் கீழே வைக்க முடியாத அளவிற்கு வாசிக்க வைச்சிருக்கு. இந்த புதினம் எழுதிட்டு இருக்கும் போதே அவரு போய் சேர்ந்திட்டாராம். முடிவை குன்ஸா இன்னொரு சய் ஃபை ஆளான ரிச்சர்ட் ப்ரெஸ்டன் எழுதி முடிச்சிருக்கார். ஒண்ணும் பெரிசா வித்தியாசம் தெரியவில்லை. இருப்பினும் சில மரணங்களை அவர் தவிர்த்திருப்பாரோன்னு தோனச் செய்தது.

பாதி படிச்சிட்டு இருக்கும் போதே இதை எழுதியே ஆகணுங்கிற அளவிட முடியா அவா உந்தித் தள்ள இறக்கி வைக்கலாம்னு  எழுதத்தொடங்கினேன். இந்த புதினத்தோட கரு என்னான்னா வளர்ந்து வரும் இளம் உயிரியல் விஞ்ஞானிகள் ஓர் ஏழு பேர் அடங்கிய குழு, எப்படி கார்ப்பரேட் தனமான ஒரு பணப் பிசாசு, தன்னுடைய கட்டிங் எட்ஜ் தொழிற் நுட்ப ஆய்வகத்தில் புதிய விதமான கருவிகளைக் கொண்டு இது வரையிலும் அறிவியல் உலகில் கண்டறியாப் பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடிக்க இருப்பதாகவும், அதற்கு இளம் விஞ்ஞானிகள் தங்களுடையப் பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் இடம் பிடிப்பது உறுதின்னு மூளைச் சலவை செய்து ஆள் பிடிப்பதிலிருந்து தொடங்கிறது இந்த புதினத்தோட சதுரங்க வேட்டை.

அதற்கென அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எப்படி ஒரு நிறுவனம் தன்னை சந்தை படித்திக் கொள்ள மலிவான உத்திகளில் எல்லாம் ஈடுபடுகிறது என்பதற்கென ஃபெர்ராரி கார்களையும், அழகிய பெண்களையும் பல்கலை கழகங்களின் ஆய்வுக் கூடங்களின் முன்பாக நிறுத்தி இளம் மாணவர்களை உசுப்பேத்துவாக மைக்கேல் சுட்டிக்காட்டுவது- பணம் படைத்த ஒரு சிலர் குறிப்பிட்ட கால காட்டத்தில் தங்களின் சுய வளர்ச்சிக்கென ஒரு துறையை வளர்த்தெடுப்பதும் அதற்கு மேல் கறப்பதற்கு ஒன்றுமில்லை எனும் போது துடைத்தழிப்பதுமாக தங்களது ஆளுமைத் திறனை காட்டுகிறார்கள் என்பதாகக்  கல்வியூட்டிச் செல்கிறார்.

அப்படியாக காம்ப்ரிட்ஜ் பல்கலையிலிருந்து ஒரு ஏழு மாணவர்களைத்
ஹவாயில் அமைந்திருக்கும் தலைமை ஆய்வகமான நானிசெஞ்சிற்கு இலவச விமான டிக்கெட்டுடன் அங்கே அழைக்கப்படுகிறார்கள்.  அந்த மாணவர்களில் ஒருவனான பீட்டரின் அண்ணன் எரிக் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவன். அந்த நிறுவனம் அளவிடற்கரிய காந்த சக்தியை பயன் படித்தி மைக்ரோ ரோப்பாட்டுகளையும், மனிதர்களையே சுருக்கி நம்முடைய கட்டைவிரலிலும் சிறிய அளவில் ஆக்கி நம் கண்ணுக்கு புலப்படா மைக்ரோ உலகினுள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ட்ரேக், பீட்டரின் அண்ணனான எரிக்கை கொலை செய்ய எத்தனிக்கிறான்.கொலை செய்யப்படுவதற்கு முன்பாக  அலைபேசியில் ‘வராதே’ என்ற வார்த்தையோடு எரிக்கின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

இருப்பினும் செய்தி அந்த நிறுவனத்திலிருந்து பீட்டருக்கு அறியத்தரும் பொழுது அவன் உடனே கிளம்பிச் செல்கிறான். அந்த மரணத்தில் ஏதோ மர்மமிருப்பதாக பீட்டருக்கு தெரிய வரும் பொழுது, மொத்த மாணவக் குழுவையே சிறிய மனிதர்களாக சுருக்கி காட்டினுள் தொலைத்து விடுகிறார்கள்.

அந்த நிறுவனம் நாம் பயன்படுத்தும் மண் தோண்டும் வாகனத்திலிருந்து,
ஹெலிகாப்டர்கள், கார்கள் வரை புதிய தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி
சுருக்கி மைக்ரோ உலகில் பயன்படுத்தி வருகிறார்கள்.  மைக்ரோ உலகென்பது
ஹவாய் மலைக்காடுகளில் தரை  அளவில் மக்கிய இலை, சருகு, மரத்
துண்டங்களுக்கிடையே  அமைந்த இடம்.

நம் கண்ணுக்கு புலப்படா பல மைக்ரோ அளவிலான பூச்சிகளும், ஏனைய உயிரினங்களின் வாழ்வமைவையும், அவைகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள எது போன்ற வேதிய பொருட்களை சுரக்கிறது, தங்கள் இனங்களுக்குள்ளாக தொடர்பு கொள்ள  எது போன்ற சமிக்கைகளை அனுப்புகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அந்த உலகில் இன்னமும் கண்டறியப்படா பல மில்லியன் உயிரினங்களைக் கண்டறிந்து அறிவியல் உலகிற்கு புலப்படுத்துவது என ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த முனைகிறது நானிஜென் நிறுவனம்.

இதற்கென மனிதர்களைச் சுருக்கி ஒரு அங்குலத்திற்கும் குறைவாக அனுப்பவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அது போன்ற தள ஆராய்ச்சிக்கென அவர்கள் காட்டிற்குள் செல்லும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். அவர்களின் உருவத்திற்கு ஒரு கட்டெறும்பு கூட ஒரு காண்டாமிருகத்தினை ஒத்த அளவுடையதாகிறது. நிராயுதபாணியாக அந்த இடத்தில் எறும்பிற்கு முன்னால் கூட எல்லாம் தெரிந்த மனிதன் ஒன்று மற்றவர்களாகி விடுகிறார்கள். அப்படியாக பிற வண்டுகளின் மூலமாகவோ, என்னற்ற  மற்ற ஆபத்துக்களின் வாயிலாகவோ ஏதாவது காயப் பட நேர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டால் கசிவு நிற்பதில்லை முடிவு மரணம். அந்த காந்த சக்தியின் பரிமாண சுருக்க விளைவினாலோ, அல்லது இடையில் ஏதாவது முதன்மை ஆய்வு நிலையத்திலிருந்து தொடர்பு துண்டிக்கப் பட்டாலோ மீண்டும் அந்த மைக்ரோ மனிதர்கள் பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரப்படாத நிலையில், மூன்றாவது நாள் மரணம் நிச்சயமாகிவிடுகிறது.

இந்த நிலையில் சில பல அறிவியல் விஞ்ஞானிகளை முன்னமே அந்த உலகிற்கு அனுப்பிக் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த ஏழு பேரில் கடைசியாக மிஞ்சுவது இரண்டு பேர் மட்டுமே! இந்த புத்தகத்திற்கென மைக்கேல் மேற்கோள் காட்டியிருக்கும் தரவுகள் இதனை எழுதுவதற்கென அவர் எடுத்திருக்கும் முயற்சி, நோ ச்சான்ஸ்! ஹவாய் மலைக்காடுகளில் உள்ள பூச்சி பட்டைகளிலிருந்து, அவைகளின் வாழ்வமைவு, பழக்க வழக்கமென பக்கத்திற்கு பக்கம் இயற்கையின் விந்தைகளை நம் கண் முன்னே விரித்திச் செல்கிறார். பறவைகளுக்கும், வவ்வால்களுக்கும் தாங்கள் இரையாவதிலிருந்து போராடுவதாகட்டும், சிலந்தி எப்படி தனது நச்சை இரையாகப் போகிற மைக்ரோ மனிதன் மீது உமிழ்ந்து அவனை வெளியிலேயே செரிமானப் படுத்தி பின்பு உட்கொள்கிறது என்பது போன்ற விசயங்கள் ஆச்சர்யத்தையும், அடுத்து யார் இறக்கப் போகிறார்கள் என்ற பரிதவிப்வையும் ஒருங்கே விட்டுச் செல்லுகிறது.

இந்த மைக்ரோ ரோபாட்களைக் கொண்டு பிற்காலத்தில் மனித இனம் நிகழ்த்தப் போகும் போர் முறைகளை பற்றிச் சுட்டுக்காட்டுமிடம் இதனை எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை நினைவூட்டுகிறது. அவரின் பல கதைகள் படங்களாக ஆகியிருக்கும் நிலையில் இந்த புத்தகம் வெகு சீக்கிரம் திரைக்கு வர வேண்டும். அண்மையில் திரையில் பார்த்த ’த ஆண்ட்மென்’ கொஞ்சம் ஞாபகத்திற்கு வந்து போனதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த புத்தகத்தின் விறுவிறுப்பும் அதன் கருவும், இயற்கைக்கு முன்பாக நாம் எத்தனை சிறியவர்கள் என்பதனைச் சுட்டிக் காட்டும் படமாக
நிச்சயம் அமையும்.


2 comments:

தமிழ் செல்வா said...

நன்றி. அந்த புத்தகத்தை உடனே வாசிக்கத்தூண்டும் அளவில் உங்களின் எழுத்து நடை விறுவிறுப்போடு இருக்கிறது. பாராட்டுக்கள்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான பகிர்வு .புத்தகம் படித்த உணர்வில் ஆழ்ந்து போய் அப்படியே அதே உணர்வில் ...

Related Posts with Thumbnails