Tuesday, February 09, 2016

தேர்ந்த மனதும் அஞ்சலியும் by Prabhakar

.. *நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்* ...

இந்த முடிவு பத்தியிலிருந்து என்னுடைய உரையாடல் தொடங்குகிறது. அந்த *நிலமற்றவன்* என்ற ஒற்றை சொல்லாடல் எத்தனை எள்ளலையும், அலட்சியத்தையும் கொண்டதாக உள்ளது. ஹ்ம்ம்.

மனித வாழ்வின் எதார்த்தமான வாழ்வை ஒரு படைப்பாளி படைக்கும் பொழுது அதனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியவர்கள் அவரவர்களின் வாழ்வுப் பின்னணியில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டோ, அல்லது தன்னுடைய முன்னோர்களின் வாழ்விட அமைப்பு, வாழ்க்கை முறை, கடந்த வந்த ஏற்ற இறங்கங்கள், மொழி போன்றவைகள் தாக்கமூற்றி ஆழமாக மனதினில் தடயங்களை விட்டு சென்று பார்வையாளனை, அல்லது வாசகரின் ஆன்மாவை நெஞ்சிலிருந்து உருவி ஆணி அடித்து கட்டிப் போட்டு விட்டதாக உணரச் செய்ய வல்லது. இதனை இன்னொரு கூடு விட்டு கூடு பாயும் கதை சொல்லிக்கு சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமன்பதல்ல.
சில சூழ்நிலைகளில் வாழ்வியலின் எதார்த்ததை அப்படியே பருக நினைப்பவர்களுக்கு மொழியோ அல்லது உணவு, உடை சார்ந்த பழக்க வழக்கமோ தடையாக இருந்து விட முடியாது. கண்களின் வழியாக ஊடுருவி ஒரு ஆன்மாவை தரிசிக்கும் அந்த குழந்தைமைக்கே ஆனா சூழ்ச்சியற்ற தூய மனமிருந்தாலே அந்த கதையின் மையத்திற்குள் தங்களை உள்ளே நகர்த்தி கதா மாந்தர்களுடன் அழுவும் பொழுது அழுதும், சிரிக்கும் பொழுது சிரித்தும், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தும் மீண்டும் வரக் கூடிய ஆன்ம சிதைப்பு, மறு கட்டெடுப்பு நடத்தி மயான வைராக்கியத்துடன் வெளி வரக் கூடிய அளவிற்கு ஒரு கிராமத்தின் பாலக்கட்டையை வைத்தே கூட நாடுகளின் எல்லைகளை கடந்து மனதுகளின் மையத்துக்குள் அந்த மண் சார்ந்த மக்களை, அவர்களின் வாழ்வியலைக் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த பின்னணியில் வைத்து பார்க்கும் பொழுது அந்த ஒற்றை பாலத்தை பின்புலமாக கொண்டு கதை சொல்லிய இயக்குனர், எழுத்தாளர் ஒரு மலையாளியாக இருந்து போகும் பச்சத்தில், இரண்டு தலைமுறைக்கு முன்பே புலம் பெயர்ந்த தாய் தந்தைகளை பின்புலத்தில் கொண்டிருந்தாலும், மலையாள வாசிப்பு, நல்ல சினிமா ரசனையுள்ள மக்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு நல்ல படைப்புகளை கண்டெடுக்கவும், அடையாள படுத்திக் கொடுக்கவும் தவறி இருப்பார்களா என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக தனி மனித மனது ஏதோ ஒரு வகையில் தனக்கு தேவையான வற்றை அடைந்து கொண்டதாக எண்ணும் பச்சத்தில், இந்த பொருள் சார் உலகிலிருந்து தப்பி அதனையும் தாண்டி வேறு எதனையோ தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும். அது போன்ற உள்ளங்கள் நாடு, எல்லை, மதங்கள் தாண்டி வெளியுலகில் பயணித்து கொண்டே இருக்கிறது. சில பேருக்கு அது இந்த வாழ்விலேயே, குறிப்பிட்ட வயதுகுள்ளேயே அமைய பெற்றவர்களாக இருக்கும் பச்சத்தில் இது போன்ற ட்ரைப்யூட் கிடைப்பதில் ஒன்றும் எனக்கு ஆச்சர்யமில்லை.
நான் கோவையில் இருக்கும் பொழுது சுத்தமாக ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாமல் மிகககக மெதுவாக ஊர்ந்து நகரும் படங்களை கூட பார்த்ததுண்டு. என்னுடைய முனைவர் வழிகாட்டி ஒரு மலையாளி. ஒரு முறை அப்படியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் மிக குதுகலமாக அந்த படத்தைப் பற்றிச் சொல்லி, நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமென்று கூறி அவரும் திரையரங்கு சென்று படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து புன் முறுவலுடன் 'இனிமே, சாமீ ஆளைவிடு' என்ற ரேஞ்சிற்கு நடந்த நிகழ்வு அது.
அது ஏன் இங்கே என்றால், மொழி ஆங்கில உப தலைப்பு இல்லையென்றாலும் கதா பாத்திரங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட ஒரு சிறந்த கதை சொல்லி மையத்துடன், கதாபாத்திரங்களுடன் வைத்து தைத்து விட முடியும். தேவை அதற்கான ரசனையாளன் அல்லது முற்றிய மனது!
இந்த ஒரு சிறு ரசனைக்கான/தான் வாசிக்கும், படங்களின் ரகங்களை தேர்ந்தெடுக்கும் பின்னணியில் எது போன்ற ரசிகன் இருக்க முடியும் என்று புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் அல்லது ஆச்சர்யம். எதற்காக அந்த கதை சொல்லி இப்படியான ஒரு ரசிகனை தான் சம்பாதித்து இருக்கிறோமா என்று தெரிய வரும் பச்சத்தில், அவரே துணுக்குற வேண்டும்?
இதிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் அந்த கதை சொல்லியின் ஜெனியூன் ஈடுபாடு, கலப்படமற்ற எழுத்து, இயக்கம் மற்றும் வழங்கிய விதம்- தன்னுடைய மண்ணைப் பற்றியும், அந்த மண் சார் மக்களைப் பற்றியும் அதன் விழுமியங்களைப் பற்றியும் எந்த விதமான சாய்வுகளுக்கும் உட்படுத்தாமல் காலங்களை தாண்டி எதார்த்தம் சொல்லி நிற்பவையாக வழங்கியிருக்க வேண்டும்.
இன்னும் நான்கு தலைமுறைகளைக் கடந்து ஈழத்திலிருந்தோ/தமிழகத்திலிருந்தோ புலம் பெயர்ந்த ஒரு தமிழன் இதே போன்றதொரு ட்ரைப்யூட் ஏதாவது தன் மண் சார்ந்த விழுமியங்களை, விளிம்பு நிலை வாழ்க்கையை சொல்லும் ஓர் உண்மையான கதை சொல்லிக்கு எடுப்பான். அப்பொழுதும் இது போன்றே இத்தனை மொழியறிவோடு இருக்கும் ஒருவன் எப்படி பத்து மிதி/மாட்டு வண்டிகளோடு வாழ்ந்த ஒரு கதை சொல்லியைப் பற்றி அறிந்து இத்தனை உருக்கத்தோடு வயொலின் பின்னணியில் ஒலிக்க நம்மை விசும்பச் செய்யும் வகையில் ஓர் அஞ்சலி செலுத்த முடியுமென்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்போம்.
தொடர்ந்து ஆழ் மனதின் எல்லைகளற்ற பெரும் விசும்பல்களும், பொறாமையும், அகங்காரமும் மட்டுமே வேப்ப மரத்தின் உச்சியில் நின்று அசைந்தாடுவதை ஒத்து காட்டிக் கொடுப்பதாக உள்ளது இந்த அண்டமகா பேரொளியின் பெருமூச்சுகளை செவி மடுக்கும் பொழுது.
பி.கு: இந்த தொடர்புடைய சுட்டிகள் சம்பந்தபட்டவர்களைபற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அதற்கு ஒரு சிறப்பு நன்றி! தெறிஞ்சிக்காமயே செத்தாலும் நெஞ்சு வேகும்தேய்ன்... இருந்தாலும்...

Related Links:




0 comments:

Related Posts with Thumbnails